
தற்போது வேலைவாய்ப்பு சந்தை உலகம் முழுவதுமே சவால் மிக்கதாக மாறியிருக்கிறது. ஒயிட் காலர் வேலைகள், கோடிங், ஹெச்.ஆர் வேலைகள் ஏஐ வசம் சென்ற வண்ணம் இருக்கிறது. இதன் காரணமாக ஏற்கனவே வேலை செய்து வருபவர்களும் புதிதாக வேலை வாய்ப்பு சந்தைக்குள் நுழைபவர்களும் முன்பை விட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
பொதுவாகவே ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் நல்ல பட்டப்படிப்பை முடித்து விட்டால் பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் நம்முடைய வாழ்க்கையை செட்டில் ஆகிவிடும் என்ற சூழல் தான் முன்பு இருந்தது . ஆனால் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. லிங்குடின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரியான் ரோஸ்லான்ஸ்கி தி பிஸ்னஸ் இன்ஸைடருக்கு அளித்துள்ள பேட்டியில் தற்போதுள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும் , கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கியிருக்கிறார் .
ஒரு பெரிய பல்கலைக்கழகத்தில் என்னிடம் டிகிரி இருக்கிறது எனக்கு நல்ல வேலை கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார் . உலக வேலைவாய்ப்பு சந்தை பாரம்பரியமான டிப்ளமோ ,டிகிரி சான்றிதழ்களில் இருந்து தொழில் ரீதியிலான திறன், ஏஐ சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக மாறி இருக்கிறது என கூறுகிறார் .
எனவே இளம் தொழில் நிபுணர்கள், புதிதாக வேலை தேடி வரக்கூடிய நபர்கள் தாங்கள் நுழையக்கூடிய துறையில் பிராக்டிகல் ரீதியிலான அனுபவத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் , நவீன மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். வேலை வேண்டும், வேலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என எண்ணும் அவர்கள் ஏஐ சம்பந்தப்பட்ட தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் தங்களுடைய வேலைகளில் முடிந்த அளவு ஏஐ கருவிகளை பயன்படுத்த தொடங்க வேண்டும் என அறிவுரை வழங்கியிருக்கிறார்.
லிங்குடின்னில் போடப்படும் வேலைவாய்ப்பு பதிவுகளில் ஏஐ அறிவு தேவை என்பதை அதிகம் காண முடிகிறது என்கிறார். தொலைநோக்கு பார்வை கொண்டு , புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் கொண்ட நபர்களுக்கு தான் வேலை வாய்ப்பு சந்தை சாதகமாக இருக்கிறது என கூறியிருக்கிறார். நிறுவனங்கள் தற்போது உங்களுடைய டிகிரியை மதிப்பதே கிடையாது என தெரிவித்திருக்கும் அவர் புதிய திறன்களை கற்றுக் கொள்ளும் ஆர்வம் உங்களிடம் இருக்கிறதா, குறிப்பிட்ட வேலையில் பிராக்டிகல் ரீதியிலான புரிதல் உங்களிடம் இருக்கிறதா என்பதை தான் சோதனை செய்கிறார்கள் அதன் மூலம் தான் உங்களுக்கான வேலையும் அதற்கான சம்பளமும் நிர்ணயம் செய்யப்படுகிறது என கூறுகிறார்.
அண்மையில் மைக்ரோசாப்ட் நடத்திய ஆய்வில் 71% தொழிலதிபர்கள் குறைந்த அனுபவமே இருந்தாலும் அதிக ஏஐ திறன் கொண்ட நபர்களை நாங்கள் வேலைக்கு எடுப்போம் என கூறி இருக்கின்றனர். ஏஐ அறிமுகமே இல்லாதவர்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு கிடையாது என 66 சதவீதம் பேர் தெரிவித்து இருக்கின்றனர்.