இதில் கலந்துகொண்ட அரவிந்த் சாவந்த், ராஜபாவு வாஜே மற்றும் அனில் தேசாய் ஆகிய எம்பிக்கள் உத்தவ் தலைமையிலான அணியால் நடத்தப்பட்ட கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டங்களில் கெளரவிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவைச் சேர்ந்த (UBT) ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுடன் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவசேனாவை இரண்டாக உடைத்து, அதைத் தற்போது தன்வசப்படுத்தியுள்ள ஏக்நாத் ஷிண்டேவால், உத்தவ் தாக்கரே தரப்பில் UBT என்ற பெயரில் கட்சி இயங்க ஆரம்பித்தது. இந்தக் கட்சியில் மேலும் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உத்தவ் தாக்கரே, சமீபத்தில் முக்கியமான ஒற்றுமைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் அவருடைய 9 எம்பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இதில் சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், ஓம்ராஜே நிம்பல்கர், பாவுசாஹேப் வக்சௌரே மற்றும் நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய 5 எம்பிக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால், அவர்கள் சிவசேனாவில் ஐக்கியமாகலாம் எனத் தகவல் பரவியது.

உத்தவ் தாக்கரே
இதற்கிடையே, கடந்த 18ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் அவரது கட்சியின் ஒன்பது மக்களவை உறுப்பினர்களில் மூன்று பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இது, மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதில் கலந்துகொண்ட அரவிந்த் சாவந்த், ராஜபாவு வாஜே மற்றும் அனில் தேசாய் ஆகிய எம்பிக்கள் உத்தவ் தலைமையிலான அணியால் நடத்தப்பட்ட கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டங்களில் கெளரவிக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறியதற்காக நாகேஷ் ஆஷ்டிகர், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம்பிரகாஷ் ராஜேனிம்பல்கர் மற்றும் பௌசாஹேப் வக்சௌரே ஆகியோர் மீது சிவசேனா (யுபிடி) ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியது. கட்சியானது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதுடன், பதிலளிக்க ஏழு நாட்கள் அவகாசம் வழங்கியது. இந்த நிலையில், அந்த 6 உறுப்பினர்களும் இன்று மாலை 3 மணிக்கு, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியில் இணையலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏக்நாத் ஷிண்டே
இதன்மூலம், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க, அந்த அதிருப்திக் கூட்டணிக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பலம் கிடைக்கக்கூடும். மகாராஷ்டிர சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் நடைபெறும் இந்தக் கூட்டம், கட்சித் தாவல்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளது.
