இந்த விவகாரம் இத்தாலி – அமெரிக்காவையும் தாண்டி, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிற்கும் இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. வாருங்கள் இதுகுறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.
2026-ஆம் ஆண்டுக்கான ஜி7 (G7 Summit) உச்சி மாநாடு பிரான்சின் (France) எவியான் (Évian) நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) புகைப்படம் எடுக்கக் கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) சமீபத்தில் தெரிவித்திருந்தார். “அவர், என்னுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளும்படி கெஞ்சினார். அவர், என்னுடன் ஒரு புகைப்படம் எடுக்க மிகவும் விரும்பினார். நான் அதை எடுத்திருக்க மாட்டேன். ஆனால், அவர் மீது எனக்குப் பரிதாபமாக இருந்தது” என்று அவர் கூறியதாக La7 ஊடகம் தெரிவித்திருந்தது. இது, உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி பதிலடி கொடுத்திருந்தார். “டொனால்டு ட்ரம்பின் கூற்றுகள் முற்றிலும் புனையப்பட்டவை. நான் வெளிப்படையாகவே திகைத்துப்போனேன். அமெரிக்க அதிபர் ஏன் தனது நட்பு நாடுகளிடம் இப்படி நடந்துகொள்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” எனத் திரித்துக் கூறியதாக ட்ரம்ப் மீது அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ட்ரம்ப்
இந்த நிலையில், டொனால்டு ட்ரம்பிற்கும் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஈரானின் அணுசக்தி லட்சியங்களுக்கு எதிராக அமெரிக்கா துணை நிற்க மறுக்கும் அதேவேளையில், இத்தாலி அமெரிக்காவால் பயனடைவதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருப்பது இருநாட்டு உறவுகளிடம் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. “நேட்டோவிற்காக டிரில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்த பிறகும், இத்தாலியும் அதன் பிரதமரும், ஈரானுக்கு எதிராக நம்மையும் உலகின் பிற நாடுகளையும் பாதுகாக்க அவர்கள் தயாராக இல்லை. பல தசாப்தங்களாக நாம் அவர்களைப் பாதுகாத்து வருகிறோம். இது நல்லதல்ல. மேலும், ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதையோ அல்லது உருவாக்குவதையோ தடுக்கும் விஷயத்தில், அமெரிக்காவை மெலோனி நிராகரித்ததால், இத்தாலியில் அவரது செல்வாக்கு சரிவைச் சந்தித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மெலோனி
எனினும் இதற்குப் பதிலடி கொடுத்துள்ள மெலோனி, “அதிபர் ட்ரம்ப் அவர்களே, இந்தத் தொடர்ச்சியான, காரணமற்ற தாக்குதல்கள் அர்த்தமற்றவை. என் செல்வாக்கைப் பொறுத்தவரை, உங்கள் நண்பராக இருப்பது நிச்சயமாக அதற்கு உதவவில்லை; அது, உங்களுடனான என் உறவையும் சார்ந்திருக்கவில்லை. எனது செல்வாக்கு, இத்தாலியின் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் எனது திறனைச் சார்ந்துள்ளது; அதைத்தான் நான் எப்போதுமே செய்து வந்திருக்கிறேன்” எனச் சாட்டையடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் இத்தாலி – அமெரிக்காவையும் தாண்டி, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.
