
ஈச்சர் மோட்டார்ஸின் புகழ்பெற்ற ராயல் என்ஃபீல்டின் 350சிசி பைக்குகள், முதல்முறையாக ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளன. புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, கோன் கிளாசிக் 350 மற்றும் புதிய மீட்டியோர் 350 ஆகிய மாடல்கள் செப்டம்பர் 22, 2025 முதல் பிளிப்கார்ட்டில் கிடைக்கும்.
பெங்களூரு, குருகிராம், கொல்கத்தா, லக்னோ, மும்பை ஆகிய ஐந்து நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என நிறுவனம் ஈச்சர் மோட்டார்ஸ் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பையடுத்து, ஈச்சர் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் 1.31% உயர்ந்து, வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ரூ. 7,016 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
இந்த டிஜிட்டல் முயற்சி, வாடிக்கையாளர்களுக்கு பைக்குகளை வாங்கும் முறையை எளிதாக்கும் என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எளிதாக பைக்குகளை ஆராய்ந்து வாங்கவும், பல்வேறு கட்டண விருப்பங்களை பயன்படுத்தவும் இது வழிவகுக்கும்.
பிளிப்கார்ட் வழியாக பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 22, 2025 முதல் ஜிஎஸ்டி சலுகைகளும் முழுமையாக கிடைக்கும். பைக்குகள் விநியோகம் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை ராயல் என்ஃபீல்டின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் கையாளுவார்கள்.
இந்த கூட்டணி குறித்து ஈச்சர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் ராயல் என்ஃபீல்டு தலைமைச் செயல் அதிகாரி பி. கோவிந்தராஜன் கருத்து தெரிவித்தார். “டிஜிட்டல் தளத்தில் பைக்குகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு எளிமையான, வசதியான வாய்ப்பு” என்று கூறினார்.
“இந்தச் சேவை தற்போது ஐந்து நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். பைக் வாங்கும் நடைமுறையை எளிதாக்குவதோடு, அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் நேரடி டெலிவரி வழங்குவது வாடிக்கையாளர்களுடனான தனிப்பட்ட தொடர்பை உறுதி செய்யும்” என்று அவர் விளக்கினார்.
ராயல் என்பீல்டு பைக்குகளை சொந்தமாக்கும் மகிழ்ச்சியை ஒவ்வொரு ஆர்வலருக்கும் மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் இது ஒரு முக்கிய படி என கோவிந்தராஜன் குறிப்பிட்டார். ஜூன் 2025 நிலவரப்படி, ஈச்சர் மோட்டார்ஸில் அதன் பிரமோட்டர்கள் 49.07% பங்குகளை வைத்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு பண்டிகை காலம் தொடங்குவது என விற்பனையை அதிகரிக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் உண்டாகி இருப்பதால் இந்த சீசனில் வாகன விற்பனை களைகட்டும் என ஈச்சர் மோட்டார்ஸ் நம்புகிறது.