
தடகள போட்டி என்றாலே நம் நினைவில் வந்து செல்லும் ஒரு பெயர் உசைன் போல்ட். இவர் தடகள போட்டியில் கலந்து கொண்டாலே ஒட்டு மொத்த உலகத்தின் கவனமும் இவர் மீது தான் இருக்கும், இந்த முறை எந்த சாதனையை முறியடிக்க போகிறார் என அனைவரும் காத்திருப்பார்கள்.
தடகளத்தில் பல்வேறு தங்க பதக்கங்களை வாங்கி பூமியிலேயே வேகமான மனிதன் என பெயர் பெற்றவர் தான் உசைன் போல்ட். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரரான உசைன் போல்ட், எட்டு முறை ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். 100 மீட்டர் , 200 மீட்டர் என பல்வேறு ஓட்டப்பந்தயங்களிலும் மின்னல் வேகத்தில் கடந்து மின்னல் வேக மனிதன் என்ற பட்டப் பெயரை பெற்றவர் .
உசைன் போல்டின் இந்த ஓட்டப்பந்தய திறனை கண்டு வியக்காதவர்களே கிடையாது. 100 மீட்டர் தடகளத்தில் 9.58 வினாடிகளில் கடந்து உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். உலக சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை தங்கம் வென்று சாதனை படைத்தவர்தான் . 2017 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தடகள போட்டிகளில் இருந்து உசைன் போல்ட் ஓய்வு பெற்று விட்டார். தற்போது 39 வயதாகக் கூடிய உசைன் போல்ட் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு கூட சிரமப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் தி கார்டியனுக்கு பேட்டி அளித்துள்ள உசைன் போல்ட் தடகளம் சார்ந்த எந்த ஒரு பயிற்சியிலும் தற்போது தான் பங்கேற்பதில்லை என கூறியுள்ளார்.
உசைன் போல்ட் முழு நேர தந்தையாக மாறி தன்னுடைய வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். பெரும்பாலான நேரம் தான் வீட்டிலேயே நேரத்தை போக்குவதாக கூறும் அவர் ஒரு காலத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய தன்னால் தற்போது படிக்கட்டு ஏறி இறங்குவதற்கு கூட சிரமமாக இருக்கிறது மூச்சு வாங்குகிறது என தெரிவித்திருக்கிறார் .
வழக்கமாக காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கு தயார் செய்து அனுப்பி வைப்பேன், சில சமயங்களில் உடற்பயிற்சி மேற்கொள்வேன் , சில சமயம் டிவி பார்ப்பேன் எனக் கூறும் அவர் குழந்தைகளுக்காகவே தன்னுடைய நேரத்தை ஒதுக்குவதாக தெரிவித்து இருக்கிறார். உசைன் போல்டின் தடகள சாதனையை இதுவரை எந்த ஒரு வீரரும் முறியடிக்க முடியவில்லை. எட்டு ஆண்டுகள் அவர் தடகள போட்டிகளை விட்டு விலகி இருந்தாலும் இதுவரை அவருடைய வேகத்திற்கு அருகில் கூட யாரும் வர முடியவில்லை . உசைன் போல்டுக்கு ஒலிம்பியா என்ற ஐந்து வயது மகளும் நான்கு வயதில் சாண்டிரியோ மற்றும் தண்டர் என 2 இரட்டையர்களும் இருக்கின்றனர்.
அடுத்த ஒலிம்பிக் போட்டியின் போது தன்னுடைய குழந்தைகளை அழைத்து சென்று போட்டிகளை நேரில் காண செய்ய இருப்பதாக உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். உசைன் போல்டின் இந்த பேட்டியை கண்டு 90ஸ் கிட்ஸ் உசைன் போல்ட்டுக்கும் நம்மை போல வயதாகி வருகிறது என புலம்புகின்றனர்.