சென்னை: ஆண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுவதாக வெளியான தகவலை மறுத்துள்ளது தமிழக அரசு. ஆணாக இருந்தால் மட்டும் போதும். தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசு வழங்குகிறது என்று குறிப்பிட்டு ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறி ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது திரிக்கப்பட்ட தகவல் என்றும், தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 பெறுவதற்கு, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். ஆணாக பிறந்த அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என்பது தவறான தகவல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், ஆண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குகிறது என்ற தகவலுடன் ஒரு காணொளி பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு செயலியைப் பதிவிறக்கம் செய்து அதில் விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்தால் ஆண்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 நிதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தகவல் முழுவதும் வதந்தி என்றும், தமிழ்நாடு அரசு இதுபோன்ற எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும் ஆணாக பிறந்த அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என்பது தவறான தகவல். வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தமிழக அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு அரசின் உண்மையான தமிழ் புதல்வன் திட்டம் என்பது மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு கல்வி நலத் திட்டமாகும். அதன் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். ஆனால் இந்தத் திட்டம் அனைத்து ஆண்களுக்கும் அல்ல, மாறாக குறிப்பிட்ட தகுதியுடைய மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது.
தமிழ் வழியில் கல்வி கற்ற மாணவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் பயனாளிகளாக இருக்க முடியும். அவர்கள் அரசுப் பள்ளிகள் அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். இளங்கலைப் பட்டப்படிப்பு, டிப்ளமோ அல்லது ஐடிஐ படிப்புகளை தொடர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இந்தத் தொகை வழங்கப்படும்.
இந்தத் திட்டம், மாணவர்கள் தங்கள் கல்வியை நடுவில் நிறுத்தாமல் முடிக்க ஊக்குவிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அதாவது, இது பொதுவாக அனைத்து ஆண்களுக்கும் வழங்கப்படும் நிதி அல்ல, கல்வி தொடரும் தமிழ் வழி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி திட்டமாகும். எனவே, ஆணாக இருந்தால் போதும், மாதம் ரூ.1,000 கிடைக்கும் என்கிற தகவல் முழுமையாக பொய்.
இது போன்ற தவறான தகவல்களை சில மோசடி குழுக்கள் செயலி பதிவிறக்கம் செய்ய வைக்கும் வகையில் பரப்பி வருவதாகவும், அதன் மூலம் மக்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சி செய்யலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, இத்தகைய செயலிகள் அரசுடன் தொடர்புடையவை அல்ல. எந்த அரசுத் திட்டத்திற்கும் பதிவு செய்ய வேண்டுமானால், தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் அல்லது e-Sevai மையங்கள் வழியாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்பி எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்பி எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என சைபர் குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் புதல்வன் திட்டம் என்பது கல்வி தொடர்பான நலத்திட்டம். அது பாலின அடிப்படையில் வழங்கப்படுவதல்ல. எனவே, இதுபோன்ற வதந்திகளை நம்பாதீர்கள். எந்த அரசுத் திட்டம் பற்றிய தகவலாக இருந்தாலும், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே சரிபார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
