இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. 34ஆவது ஓவரின் நான்காவது பந்தில் ஹர்ஷித் ரானா வீசிய பந்தை கேரி தூக்கி அடிக்க அது எக்ஸ்ட்ரா கவரில் நின்று கொண்டிருந்த ஸ்ரேயஸ் ஐயர் கைகளில் விழுந்தது. கடினமான கேட்சை தடுமாறி பிடித்து விழுந்தார் ஷ்ரேயாஸ். அப்போது இடது பக்க வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக களத்தில் இருந்து ஷ்ரேயாஸ் வெளியேறிவிட்டார். சிறிது நேரத்தில் காயம் தொடர்பாக முழுமையாகக் கண்டறிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில், இன்று பிசிசிஐ கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “அக்டோபர் 25, 2025 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயஸ் பீல்டிங் செய்தபோது இடது கீழ் விலா எலும்பு பகுதியில் (left lower rib cage region) காயம் ஏற்பட்டது. மேலதிக பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஸ்கேன் பரிசோதனையில், மண்ணீரல் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரேயஷ் தற்போது சிகிச்சையில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் வேகமடைந்து குணமடைந்து வருகிறார் என்றும் பிசிசிஐ அறிக்கை தெரிவிக்கிறது. சிட்னி மற்றும் இந்திய மருத்துவ நிபுணர்களுடன் பிசிசிஐ மருத்துவக் குழுவும் அவரை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அதோடு இந்திய அணியின் மருத்துவரும் ஷ்ரேயாஸ் உடன் சிட்னியில் தங்கியிருந்து அவரது உடல்நிலையைக் கண்காணிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வார இறுதி வரை அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Shreyas iyer
இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர், தென்னாப்ரிக்காவுக்கு எதிராக நடைபெற இருக்கும் ஒருநாள் தொடருக்குள் குணமடைந்துவிடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. மூன்று வாரத்திற்குள் குணமடைந்துவிடுவார் என முதலில் தெரிவிக்கப்பட்ட நிலையில், முழுமையாக குணமடைய இன்னும் நாட்கள் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், நவம்பர் 30, டிசம்பர் 3 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
காயத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சிட்னியில் உள்ள ஷ்ரேயாஸ் உடன் இருப்பதற்காக ஷ்ரேயாஸின் பெற்றோர் அவசர விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
