’அதிமுக கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது. அதிமுக எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் யாரையும் கூட்டணிக்கு வம்படியாக அழைத்தது இல்லை’ என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக தன்னுடைய பழைய கூட்டணி உடனேயே தொடர்கிறது. அதிமுக, பாஜக, தமாக உள்ளிட்ட கட்சிகளுடன் தற்போது களத்தில் உள்ளது. விஜய்யின் தவெகவும் அதிமுக கூட்டணியில் இணையுமா என்ற விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டங்களில் தவெக கொடிகள் தொடர்ச்சியாக தென்படுவதும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அதனை ஆமோதித்து கூட்டணி பிள்ளையார் சுழி அமைந்துவிட்டது என பேசியதுமே இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அடித்தளம் இட்டது. இருப்பினும், இருதரப்பிலும் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதிமுக கூட்டத்தில் தவெக கொடி
இத்தகைய சூழலில் ’அதிமுக கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருக்கிறார். மதுரை காமராஜர் சாலை பகுதியில் நடைபெற்ற அதிமுகவின் 54ம் ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதுதான் செல்லூர் ராஜூ இந்த கருத்துக்களை முன் வைத்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “அதிமுக புனித தலைவர் எம்ஜிஆர் உருவாக்கி 54 வது ஆண்டு விழாவையொட்டி தான் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. மூன்றாம் தலைமுறை இன்று அதிமுகவில் தலையெடுத்துவிட்டனர். பல கட்சியில் வயதானவர்கள் தான் இருப்பார்கள். ஆனால் அதிமுகவில் மட்டுமே இளைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். 31 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சாதாரணமானவர்கள், சாமானியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் என அனைவருக்கும் வாய்ப்பளித்த இயக்கம் அதிமுக. ஒரு இயக்கத்தில் இருந்து மற்றொரு இயக்கம் பிரிவது சகஜகமான ஒன்று. ஆனால் பிரிந்த இயக்கம் ஒன்று சேர்ந்து இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக மாறி உள்ளோம். படுத்துக்கொண்டே வெற்றி பெற்றவர் எம்ஜிஆர். 5 ஆயிரம் மைலுக்கு அப்பால் இருந்தாலும் வெற்றி வாகை சூடியவர் எம்ஜிஆர்.
நாங்கள் கூட்டணிக்கு அலைந்ததாக வரலாறே கிடையாது. அதிமுக எந்த காலத்திலும் சூழ்நிலையிலும் யாரையும் கூட்டணிக்கு வம்படியாக அழைத்தது இல்லை. எங்கள் கொள்கையோடு எங்களுக்கு துணையாக மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம். அதிமுக யாருக்கும் துரோகம் இழைத்தது இல்லை. நண்பன் என்றால் நண்பன். நண்பனுக்கு உயிரையும் தோளையும் கொடுப்போம். ஆனால் அதே தோழன் காதை கடித்தால் தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம். இது தான் அதிமுக வரலாறு. இது புரிந்தவர்களுக்கு புரியட்டும்.
எங்கள் கூட்டணியில் காங்கிரசோ பாஜகவோ யார் இருந்தாலும் அதிமுக தொண்டர்கள் அவர்களுக்காக உழைப்பார்கள். நிர்வாகிகள் பாடுபடுவார்கள்” என பேசினார்.
