
ஆயிரம் கேடயங்கள் வாங்கினாலும், ஆயிரம் மேடைகளில் ஏறினாலும், ஒருவரின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது.அந்த ஒரு நாள் என் வாழ்வில் ஒரு இனிமையான கணமாக இருந்தது. இன்று அந்த நாளில் நடந்த என் இனிமையான கணங்களைப் பதிவிடுகிறேன்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் `ட்யூட்’ படம் நாளை (அக்டோபர் 17) வெளியாகவுள்ளது. இப்போது பிரதீப்பின் உதவியாளர் சேகர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி இருக்கிறது.
`டிராகன்’ திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் அனைவருக்கும் நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது. அன்றைய தினம் பிரதீபின் உதவியாளருக்கு அது வழங்கப்படாமல் தவறி இருக்கிறது. இதை நினைவில் வைத்து, சேகருக்காக கேக் வெட்டி நினைவுக் கேடயம் வழங்கி ஸ்பெஷலாகக் கொண்டாடியிருக்கிறார் பிரதீப்.
இதனால் நெகிழ்ந்து போன உதவியாளர் சேகர், “ஆயிரம் கேடயங்கள் வாங்கினாலும், ஆயிரம் மேடைகளில் ஏறினாலும், ஒருவரின் உண்மையான அன்பிற்கு அது ஈடாகாது.அந்த ஒரு நாள் என் வாழ்வில் ஒரு இனிமையான கணமாக இருந்தது. இன்று அந்த நாளில் நடந்த என் இனிமையான கணங்களைப் பதிவிடுகிறேன். மிக்க நன்றி.” எனக் குறிப்பிட்டு வீடியோவை பதிவிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் சேகர் குறித்து பிரதீப் ரங்கநாதன் “சேகர் என்னுடைய பர்சனல் உதவியாளர். டிராகன்’ படத்தில் அவர் பணியாற்றினார். `டிராகன்’ பட 100-வது நாள் விழாவில் எல்லோருக்கும் ஷீல்ட் கொடுத்தார்கள். சேகருக்குமே நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால், மேடையில் கூப்பிடும்போது அவருடைய பெயர் மிஸ் ஆகிவிட்டது. எனவே அவர் மேடையில் வந்து வாங்கவில்லை.
அந்த ஷீல்ட் அனைவருக்குமே ஒரு மொமன்டாக இருந்தது. மேடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அனைவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அன்று சேகரை மேடைக்கு கூப்பிட முடியலை என மிகவும் கஷ்டமாக இருந்தது. அவர் மிகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கக் கூடியவர். அவ்வளவு வேலை பார்த்த ஒருவருக்கு உரிய மரியாதை கொடுக்க வில்லை என்றால் மிகவும் தவறு என நினைத்தேன். அதனால், அவருக்கு ஸ்பெஷலாக ஷீல்ட் கொடுக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.” எனக் கூறியிருந்தார்.