
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கவுள்ள சூழலில், பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை
இதேபோன்று, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வரும் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் கணித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் கனமழை கொட்டியது. கடந்த மூன்று நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தக்கலை, அழகியமண்டபம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
ஸ்ரீவைகுண்டம் அருகே இரவு நேரத்தில் திடீரென பெய்த கனமழையால் வாரச்சந்தை வியாபாரிகள் பாதிப்படைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், செய்துங்கநல்லூர் வாரச்சந்தை வியாபாரத்திற்காக சாலையோரம் மண்பானை, காய்கறிகள் மற்றும் பழக் கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தீபாவளியை முன்னிட்டு வாரச்சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் மழையால் அவதியடைந்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர், பணகுடி, ராதாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்ததில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலைகளில் குளம்போல் தேங்கியது. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லக் கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் குளம்போல் தேங்கிய மழை நீரில் நடந்து சென்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பெய்த மழையால் பேருந்து நிலைய பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவேங்கடம் சாலை பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்ததில் துர்நாற்றம் வீசியது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி, நடுவலூர், தெடாவூர், ஒதியத்தூர், கூடமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.