
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்துள்ளது.
Summary
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நடைபெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றியை பதிவுசெய்துள்ளது.
வீணான சேனுரான் முத்துசாமி சாதனை..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இமாம் உல் ஹக், சல்மான் ஆகா இருவரும் 93 ரன்கள் அடித்து அசத்தினர். சுழற்பந்துவீச்சில் அசத்திய இடது கை தென்னாப்பிரிக்கா ஸ்பின்னரான சேனுரான் முத்துசாமி 117 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இது பாகிஸ்தான் மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு வெளிநாட்டு ஸ்பின்னர் பதிவுசெய்த சிறந்த பந்துவீச்சாக பதிவுசெய்யப்பட்டது. 1994-ல் ஷேன் வார்னே படைத்த சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார் சேனுரான் முத்துசாமி..

senuran muthusamy
தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 269 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்துவீசிய சேனுரான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சேனுரானின் அபாரமான பந்துவீச்சால் 167 ரன்னுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான். மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்திய சேனுரான், கடந்த 60 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது தென்னாப்பிரிக்க ஸ்பின்னராக புதிய சாதனையை படைத்தார்.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெல்ல 277 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது. 3வது நாள் ஆட்டமுடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் அடித்திருந்த தென்னாப்பிரிக்கா, 4வது நாள் ஆட்டத்தில் இலக்கை எட்டி வெற்றியை பதிவுசெய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் ஸ்பின்னர் நோமன் அலி மற்றும் ஷாஹீன் அப்ரிடி இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த தென்னாப்பிரிக்கா 183 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.