
வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உலக நாடுகளை எல்லாம் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் .
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றது முதலே வர்த்தக கொள்கைகளையே மாற்றி வருகிறார். பல்வேறு நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்கின்றன ஆனால் அமெரிக்காவோ சொற்ப வரியை விதிக்கிறது எனவே போட்டி வரி விதிக்கப்போவதாக அறிவித்தார்.
தற்போது இந்திய பொருட்களுக்கும் 50 சதவீத வரி என்பது விதிக்கப்பட்டு வருகிறது. இந்திய பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக 25% வரி என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இத்தகைய சூழலில் சீன பொருட்களுக்கு 100% வரி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சீன பொருட்களுக்கு ஏற்கனவே செலுத்தும் இறக்குமதி வரியுடன் சேர்த்து கூடுதலாக 100% வரி விதிக்கப்படுவதாகவும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்திருக்கிறார். ஒருவேளை சீனா இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கு முன்னதாகவே கூட இந்த வரி விதிப்பு நடவடிக்கை அமலுக்கு வர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த செயல் மூலம் உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மோதல் தீவிரம் அடைய இருக்கிறது. சீனா அண்மையில் தான் வாகன உற்பத்தி உள்ளிட்டவருக்கு பயன்படுத்தக்கூடிய அரிய வகை காந்தங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. இதனை அடுத்து தான் டிரம்ப் இப்படி ஒரு அதிரடி முடிவினை எடுத்திருக்கிறார்.
மேலும் அமெரிக்காவில் இருந்து செல்லக்கூடிய அனைத்து வகையான அரிய வகை சாஃப்ட்வேர் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதிப்பதாக டிரம்ப் ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். சீனாவின் நடவடிக்கைகளை கண்டிப்பதாக கூறி இருக்கும் டிரம்ப் , உலக வர்த்தகத்தில் சீனா மிக மோசமான வர்த்தக நடைமுறைகளை கையாண்டு வருகிறது என சாடி இருக்கிறார்.
சீனாவின் அரியவகை காந்தங்கள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு என்பது அனைத்து நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறியிருக்கும் டிரம்ப், நீண்ட காலமாக திட்டமிட்டு சீனா இதனை செய்து காட்டி இருக்கிறது என கூறியுள்ளார். சீனாவின் இந்த நடவடிக்கையாலேயே அவர்களுக்கு 100% வரியை விதிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்பும், சீன அதிபர் ஸீ ஜின் பிங்கும் இந்த மாத இறுதியில் தென்கொரியாவில் APEC மாநாட்டில் கலந்து கொள்ளும் போது சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடு, டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக ஸீ ஜின்பிங்கை சந்திப்பதற்கும் பேசுவதற்கும் ஒரு காரணமும் இல்லை என கூறிய டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி வேறு விதமாக பதில் அளித்துள்ளார். அதாவது ஸீ ஜின்பிங் உடனான சந்திப்பு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படவில்லை என கூறியுள்ள டிரம்ப் ஆனால் அது நடக்கும் என்றும் உறுதியாக கூற முடியாது, நடந்தாலும் நடக்கலாம் என சூசகமாக பதில் அளித்துள்ளார்.