
பிகாரில் சட்டமன்றத் தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நூறு சதவீத இணையதள ஒளிபரப்பு உட்பட 17 புதிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பிகார் மாநிலத்தில், முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், நவம்பர் 14ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இதனிடையே பிகாரில் சட்டமன்றத் தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நூறு சதவீத இணையதள ஒளிபரப்பு உட்பட 17 புதிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும்போது தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை சுமுகமாக நடத்தும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் றுறு சதவீத இணைய ஒளிபரப்பு மேற்கொள்ளப்படும், தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு சதவீத விபரங்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, ‘இசிஐநெட்’ செயலியில் பதிவிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்க நடவடிக்கை, வாக்காளர்களுக்கு அதிகாரபூர்வமற்ற அடையாளச் சீட்டுகளை விநியோகிக்கும் மையங்களை வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் அமைத்துக் கொள்ள அரசியல் கட்சியினருக்கு அனுமதி போன்றவையும் பிகார் தேர்தலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இனி வரும் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் இந்த புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.