
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை கூறி, விபத்தில் இறந்த இளைஞரின் குடும்பத்தினரிடம் ரூ.10 லட்சம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது மேலும் 10 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வீடியோ வெளியிட்டனர். அந்த வீடியாவில் தங்களை எப்படிவாது காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பாஜக நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடந்த சம்பவத்தில் தனக்கு தொடர்பு இல்லை என அண்ணாமலை மறுத்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜூக்கு 53 வயது ஆகிறது. இவரது மனைவி நாகமணி. இவர்களது மகன் திருமூர்த்திக்கு 26 வயது ஆகிறது. இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி அன்னூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து திருமூர்த்தி விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக தனியார் காப்பீட்டு நிறுவனம் மூலம் கடந்த மே மாதம் ரூ.50 லட்சம் நாகராஜ் குடும்பத்திற்கு கிடைத்தது.

பாதிக்கப்பட்டவர்கள்
வீடியோ வெளியீடு
இந்நிலையில் திருமூர்த்தியின் தம்பி அருணாச்சலம்(23) என்பவர் சமூக வலைத்தளத்தில் தனது பெற்றோருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், எனது அண்ணன் திருமூர்த்தி விபத்தில் இறந்தபோது எங்கள் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் சில உதவிகளை செய்தார்கள். அவர்கள் கூறியதால் தான் வழக்கறிஞர் நியமித்து வழக்கு பதிவு செய்தோம். மேலும் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரை பயன்படுத்தியதால் தான் வழக்கு பதிவு செய்ததாக கூறினார்கள்.
50 லட்சம் காப்பீடு
இதனிடையே அண்ணன் விபத்தில் இறந்ததற்காக காப்பீட்டு தொகையாக ரூ.50 லட்சம் கிடைத்தது. இதையறிந்த பாஜகவைச் சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி ரூ.10 லட்சம் பணத்தை கட்டாயப்படுத்தி வாங்கி கொண்டார்கள்.
10 லட்சம் கேட்டனர்
இதை தொடர்ந்து தற்போது தேர்தல் வர உள்ளதால் செலவுக்கு பணம் வேண்டும் என்று மீண்டும் அண்ணாமலை பெயரை சொல்லி அவர்கள் மேலும் ரூ.10 லட்சம் கேட்கின்றனர். தரவில்லையென்றால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர்
எப்படியாவது காப்பாற்றுங்க
மேலும் அண்ணாமலையுடன் இருந்த காணொளியை காட்டி அண்ணாமலை தான் பணம் கேட்டதாக மிரட்டி பணம் வாங்கியதாக தெரிவித்தார்கள். தற்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை.. பா.ஜ.க வில் யார் பார்த்தாலும், இதற்கு ஒரு நியாயம் வாங்கி கொடுங்கள் எப்படியாவது எங்களை காப்பாற்றுங்க” என்று கூறினார்.
பாஜகவினர் மீது வழக்கு
இதனிடையே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று நாகராஜ், இதுதொடர்பாக அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் பாஜகவைச் சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலை மறுப்பு
இந்த சம்பவம் குறித்து வீடியோ பரவிய நிலயில், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘அன்னூரை சேர்ந்த சாமிநாதன், கோகுலகண்ணன், ராசுக்குட்டி ஆகியோர் இளங்கோ மாஸ்டர் மூலம், நான் பணம் கேட்டதாக கூறி அருணாச்சலம் குடும்பத்தினரை மிரட்டி உள்ளதாக நான் அறிகிறேன். இதற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த சம்பவத்தில் எனது பெயரை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இந்த சம்பவம் அன்னூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..