
உலகம் முழுவதுமே ஆன்லைன் கேமிங் விளையாட்டுகள் மிகவும் புகழ்பெற்றவையாக மாறிவிட்டன. பலருடைய விருப்பமான அன்றாட பொழுதுபோக்கு நிகழ்வாகவும் இந்த ஆன்லைன் விளையாட்டுகள் உருவெடுத்து இருக்கின்றன.
ஒரு சாதாரண பொழுதுபோக்காக இருந்த ஆன்லைன் விளையாட்டுகளை ஒரு தொழிலாக மாற்றி ஆண்டுக்கு 3.6 பில்லியன் யூரோக்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 37 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி தொழிலாக மாற்றி சாதித்து காட்டி இருக்கிறது நார்டிக் தேசமான ஃபின்லாந்து. 5.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடுதான் , உலக அளவில் அதிக மகிழ்ச்சியான மக்கள் வசிக்கக்கூடிய நாடு என்ற பெயரும் இதற்கு உண்டு.
தற்போது 1பின்லாந்து நாட்டின் கேமிங் துறை ஒரு ஆண்டுக்கு 3.9 பில்லியன் யூரோக்களை வருமானமாக ஈட்டுகிறது. வெளிநாடுகளுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் இவ்வளவு வருமானம் கிடைக்கிறது. இதன் மூலம் ஃபின்லாந்து நாட்டின் மிகப்பெரிய ஒரு வருவாய் இயந்திரமாக ஆன்லைன் விளையாட்டு துறை மாறியிருக்கிறது.
ஃபின்லாந்து நிறுவனம் ஆன்லைன் கேமிங் பிரிவில் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது எப்படி என்பது குறித்து இந்தியாவை சேர்ந்த வின்சோ என்ற நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தி அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது நமக்கு பல சுவாரசியமான தகவல்களை வழங்குகிறது. 2009 ஆம் ஆண்டு முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 3ஜிஎஸ் ஃபோன்களை அறிமுகம் செய்தது. அப்போது முதல் தான் உலகம் முழுவதுமே மொபைல் கேமிங் மக்களிடையே புகழ்பெற தொடங்கியது .
டச் ஸ்கிரீன் போன்கள் ஆன்லைன் விளையாட்டுகளை மேலும் பிரபலமாக்கின. ப்ளே ஸ்டோர் வழியாக ஒரு கேமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எளிதாக அதனை விளையாடிவிடலாம் என்பது பலரையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக மாற்றியது. டிஜிட்டல் துறையில் பல்வேறு சோதனைகளை செய்து பார்த்து வெற்றி அடைவதில் புகழ்பெற்ற ஃபின்லாந்து நாடு இந்த ஆன்லைன் விளையாட்டை சற்று தீவிரமாகவே எடுத்துக் கொண்டது .
முதன் முதலில் ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த ரோவியோ என்ற நிறுவனம்தான் ஆங்கிரி பேர்ட்ஸ் என்ற ஆன்லைன் விளையாட்டை வெளியிட்டது. இதனை அடுத்து சில நாட்களிலேயே இது உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒரு விளையாட்டாக மாறியது. அடுத்ததாக ஹெல்சின்கியை தலைமை இடமாகக் கொண்ட சூப்பர் செல் நிறுவனம் கிளாஸ் ஆப் கிளான்ஸ் என்ற மற்றொரு ஆன்லைன் விளையாட்டை அறிமுகம் செய்தது.
இப்படி பல்வேறு ஃபின்லாந்து நாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பல ஆன்லைன் விளையாட்டுகளை அறிமுகம் செய்தன. இது உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களை உருவாக்கியது. கிட்டத்தட்ட 200 ஆன்லைன் கேம் மேம்பாட்டு நிறுவனங்கள் ஃபின்லாந்தில் செயல்படுகின்றன கிட்டதட்ட 4000 பேர் இவற்றில் வேலை செய்கிறார்கள். இதில் வேலை செய்யக்கூடிய பெரும்பாலானவர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பணிபுரிபவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபின்லாந்து அரசும் ஆன்லைன் கேமிங் துறைக்கு ஒரு பிரத்தியேக கவனம் செலுத்தி அந்த துறையில் பல முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. இதன் மூலம் ஆன்லைன் விளையாட்டு துறையின் அசைக்க முடியாத ஜாம்பவானாக ஃபின்லாந்து உருவாகியுள்ளது. சிறு வயதிலேயே கோடிங் , டிஜிட்டல் கல்வி என வளர்ப்பு முறையும் இதில் தாக்கத்தை கொண்டுள்ளது.