இந்திய பங்குச் சந்தையில், அக்டோபர் மாதத்தின் முதல் நாளில் சன் டிவி நிறுவனத்தின் பங்குகள் அதிரடியாக 18 சதவீதம் வரை உயர்ந்து ஒரு பங்கு விலை 617 ரூபாய் வரை சென்றது. ஆயுத பூஜை தினத்தில் சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியை வெளியிட்டு மக்களை குஷிப்படுத்திய இதேவேளையில், சன் டிவி பங்குதாரர்களுக்கு ஜாக்பாட் கிடைத்துள்ளது.

இந்த உயர்வுக்கு, கடந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 56 சதவீத பங்குகளை கொண்டு நிர்வாகம் செய்து வரும் டயாஜியோ நிறுவனம், ஆர்சிபி அணியின் பகுதி அல்லது முழு பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக நேற்று மாலை முதல் செய்திகள் வெளியாகி வருகிறது.
ஆர்சிபி அணியை கைப்பற்ற சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தின் சிஇஓ ஆடார் பூனாவாலா வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் எனவும் தகவல் வெளியானது. சரி இதற்கும் சன் டிவி பங்குகள் உயர்வுக்கும் என்ன தொடர்பு..?
ஆர்சிபி அணியை விற்பனை செய்ய டயாஜியோ நிறுவனம் இந்த அணியின் உரிமைக்கு வைத்த விலை தான் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியின் உரிமையாளரான கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவி பங்குகள் உயர காரணம். ஆர்சிபி விற்பனை செய்தியும், அதன் மதிப்பீடும் ஐபிஎல் அணிகளின் மதிப்பீடு அளவுகோல் புதிய மாற்றத்தை கண்டுள்ளது.
டயாஜியோ நிறுவனம், உலகின் முன்னணி மதுபான உற்பத்தியாளர்களில் ஒன்று, அதன் இந்திய கிளை நிறுவனமாக திகழும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் மூலம் ஆர்சிபி அணியின் பங்குகளை விற்க திட்டமிட்டு, இந்த விற்பனைக்கான விலையாக சுமார் 2 பில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாயில் சுமார் 16,800 கோடி ரூபாய்என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.
இது தான், ஐபிஎல் அணிகளின் மதிப்பீட்டுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
ஆர்சிபி போன்ற பிரபலமான அணியின் விலை உயரும் போது, மற்ற அணிகளின் மதிப்பையும் அதே அளவில் உயர்த்தும். அப்படி தான் சன் டிவி-க்கு சொந்தமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணியின் விலையும் உயரும் என கணிப்பில் சன் டிவி பங்ககுள் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
எஸ்ஆர்எச் மதிப்பு உயர்வு: சன் டிவியின் சந்தை மதிப்பில், எஸ்ஆர்எச் அணி சுமார் 45 சதவீத பங்கீட்டை கொண்டு இருக்கும் வேளையில், ஆர்சிபி அணியின் 2 பில்லியன் டாலர் விலை சன் டிவி சந்தை மதிப்பில் பெரும் உயர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாக ஆர்சிபி அணியின் வெற்றி, அதன் பிஸ்னஸ், பேன் பேஸ் அடிப்படையில் 2 பில்லியன் டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இதேபோன்ற தாக்கம் மற்ற அணிக்கும் ஏற்படும். இப்படி பார்க்கும் போது எஸ்ஆர்எச், ஆர்சிபி அணிக்கு இணையான மதிப்பீட்டை பெறும் என்பது தான் சந்தையின் கணிப்பு.
இது தான் சன் டிவி பங்குகள், சந்தை மதிப்பீட்டில் இன்று எதிரொலித்துள்ளது. சன் டிவி-யின் சந்தை மதிப்பில் SRH அணி சுமார் 45 சதவீத பங்கீட்டை வகிக்கும் நிலையில், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் விஷயத்தில் கதை மாறுப்பட்டதாக உள்ளது.
ஆர்சிபி அணி அதன் மொத்த சந்தை மதிப்பின் வெறும் 7-8 சதவீதம் மட்டுமே கொண்டிருப்பதால், அந்த நிறுவனத்தின் தாக்கம் குறைவாக இருக்கும். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பங்குகள் நேற்று 1293.30 ரூபாயில் இருந்து இன்று 1,354.80 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இன்று வெறும் 1.75 சதவீத உயர்வை மட்டுமே பதிவு செய்துள்ளது.