பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நிலநடுக்கத்திற்கான வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம், செபு நகரத்தில் நேற்று இரவு திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. நில அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறு சாலைகளுக்குச் சென்றனர்.
நிலநடுக்கம் காரணமாக மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் இருந்த சில கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில், மொத்தம் 22 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். செபு நகரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வரும் நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். நிலநடுக்கம் நிகழ வாய்ப்பிருப்பதால் மக்கள் கடும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது