
திருவண்ணாமலையில் காவலர்களாலேயே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது ”பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
Summary
ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்கோயிலுக்கு சாமி தரிசனம்செய்வதற்காக, தாயுடன் வந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை இடைமறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக பணியில் இருக்கும் காவலர்களே இதுபோன்ற வன்கொடுமையில் ஈடுபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள காவலகள்
இந்த நிலையில், காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இந்த சம்பவம். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? இந்த வெட்கக்கேடான நிலைக்கு பொம்மை முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.
மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.