
SUMMARY
பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் இருக்கும் நாடுகளுக்கு இயற்கையின் வளங்கள் வளர்ச்சிக்கும், நாட்டின் அரசியல் மற்றும் சமூக நிலைத்தன்மைக்கும் பெரும் தூணாக அமைகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பொருளாதார சிக்கல்கள் மற்றும் கடன் சுமைகளால் தத்தளிக்கும் பாகிஸ்தான், தனது மண்ணில் புதைந்திருக்கும் வளங்களை நம்பிக்கையின் ஒளிக்கீற்றாகப் பார்க்க தொடங்கியுள்ளது.
1990-களின் தொடக்கத்தில், மிகப்பெரிய தங்கம் மற்றும் தாமிரம் வளம், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் சாகாய் மாவட்டத்தில் ரெகோ டிக் (Reko Diq) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. Barrick Gold Company மற்றும் Antofagasta ஆகிய இரண்டு சுரங்க நிறுவனங்கள், பலூசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அரசுகளுடன் இணைந்து, ஜூலை 1993இல் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. இந்த சர்வதேச நிறுவனங்கள், 2011 ஆம் ஆண்டு வரை சுரங்கம் தொடர்பான கனிம ஆராய்ச்சி மற்றும் நடைமுறை சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக சுமார் $240 மில்லியன் செலவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவுகளில் வணிக ரீதியாகவே சுரங்கத்தை நடத்தக் கூடிய அளவிற்கு தங்கமும் தாமிரமும் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
பெருமளவில் தங்கம்
கனடிய சுரங்க நிறுவனமான பாரிக் மைனிங் கார்ப்பரேஷன் மற்றும் பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாண அரசு இணைந்து தொடங்கிய இந்த ரெகோ டிக் மூலம் சுரங்கப்பணிகளை தொடங்குவதற்கான அடுத்தடுத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ரெகோ டிக் சுரங்க உரிமையில் 50% Barrick நிறுவனத்துக்கும், மீதமுள்ள 50% பாகிஸ்தான் அரசு மற்றும் பலூசிஸ்தான் மாகாண அரசுக்குமிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சுரங்கம் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்தப்பகுதி தனிச்சிறப்புமிக்க கலாசார அடையாளமுள்ள பகுதியாக பார்க்கப்படும் நிலையில், இப்பகுதி பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இரான் ஆகிய மூன்று நாடுகளையும் ஒட்டி பரவியுள்ளது.
மீண்டும் உயிர்த்தெழுந்த திட்டம்
37 ஆண்டுகளுக்கு சுரங்கத்தின் ஆயுட்காலம் திட்டமிட்டுள்ள நிலையில், திட்டத்தின் செலவு மதிப்பு சுமார் 52 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக, பெரும் செலவில் தொடங்கப்படும் இந்த சுரங்க பணியின் மூலம் டன் கணக்கில் தாமிரமும், பல ஆயிரம் கிலோ கணக்கில் தங்கமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கப்போனால், 37 ஆண்டுகால சுரங்கப்பணியின் மூலம் சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கும் பாகிஸ்தானுக்கு, இந்த சுரங்கப்பணி பெரிய அளவில் கைகொடுக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக, நீண்ட காலமாக சட்டப்போராட்டங்கள் மற்றும் அரசியல் குழப்பங்களால் தாமதமடைந்த இந்த திட்டம், 2022ஆம் ஆண்டு Barrick Gold நிறுவனத்துடன் நடந்த சமரசத்தின் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. நாலாப்புறமும் கடன் சூழ்ந்துள்ள மற்றும் ஐ.எம்.எப். (IMF) ஆதரவை நம்பி இருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கும், அந்நிய செலவாணிக்கும் மிக முக்கியமான ஒன்றாக இருக்குமென பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகப் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தெரிவித்திருக்கும் செய்தியில், “ரெக்கோ டிக் திட்டத்திற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆறு பில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளன. மொத்த ஆறு பில்லியன் டாலர் நிதியில், 1.5 பில்லியன் டாலர்கள் ஏற்கனவே ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், ரெகோ டிக் அமெரிக்கா ஏற்றுமதி–இறக்குமதி வங்கியில் (US EXIM Bank) $100 மில்லியனைத் தாண்டும் கடனுக்கும் விண்ணப்பித்திருக்கிறது. இந்த நிதி பாகிஸ்தானின் சுரங்கத் துறைக்கும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் திருப்பு முனையாகப் பார்க்கப்படுகிறது.
உலகளவில் தாமிரத்தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசின் கவனத்தையும் ஈர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தாமிரம் EV பேட்டரிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தொழில்துறைகளில் மிகப்பெரிய பயன்பாட்டைக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக, உலகளவில் மாறிவரும் தொழில்நுட்பத்தின் காரணமாக, 2050ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 650 மில்லியன் மெட்ரிக் டன் தாமிரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2028ம் ஆண்டு முதல் சுரங்கப்பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. $6.6 பில்லியன் மதிப்புள்ள இந்த சுரங்கம் அதன் முதல் கட்டத்தில் ஆண்டுக்கு 200,000 டன் தாமிரத்தையும் 250,000 அவுன்ஸ் தங்கத்தையும் உற்பத்தி செய்ய உள்ளது. இதன்காரணமாக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும். எப்போதுமே பதற்றம் நிறைந்த பகுதியான பலூசிஸ்தான் மாகாண நிலப்பரப்பில் வருவதால், சவால்களும் வலுவாக இருக்கும் என்று தெரிகிறது. வெளியான தகவலைத் தொடர்ந்து, தாமிரம் மற்றும் தங்கம் இருப்பதாக நம்பப்படும் சாகாய் மலைகளின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.