விண்வெளி ஆய்வில் பல சாதனைகள் படைத்துள்ள மனிதனின் அடுத்த பெரிய கனவு நிலவில் குடியேறுவது. ஆனால், நிலவின் தென் துருவத்தில் சில நுண்ணுயிரிகள் உயிர்வாழக்கூடும் என நாசா தெரிவித்துள்ள புதிய தகவல், நிலவைப் பற்றிய நமது பார்வையை மாற்றியுள்ளது.
நிலவு உயிரற்றதும் வாழத் தகுதியற்ற சூழலையும் கொண்டதாகத் தோன்றினாலும், பூமியிலிருந்து அங்கு செல்லும் சில நுண்ணுயிரிகள் உயிர்வாழக்கூடும் என நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனிதர்கள் விண்வெளிக்குக் கொண்டு செல்லும் சில நுண்ணுயிரிகள், நிலவின் தென் துருவத்தில் சூரிய ஒளி நேரடியாகப் படாத பகுதிகளில் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு ஆகஸ்ட் 19, 2026 அன்று Science Advances இதழில் வெளியிடப்பட்டது. நிலவில் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அங்கு காணப்படும் பழமையான வேதியியல் தடயங்களுக்கும் விண்வெளி வீரர்கள் மூலம் ஏற்படும் நுண்ணுயிர் மாசுபாட்டிற்கும் இடையே வேறுபாடு காண்பது எதிர்காலத்தில் சவாலாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதே கவலை செவ்வாய் கிரக ஆய்வுகளுக்கும் பொருந்தும்.

Moon Reuters
நாசாவின் பிரபால் சக்சேனா தலைமையிலான ஆய்வில், மனிதர்கள் எங்கு சென்றாலும் அவர்களுடன் நுண்ணுயிரிகளும் பயணிப்பது தவிர்க்க முடியாதது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பென்சில் அழிப்பான் அளவிலான தோல் பகுதியில் சுமார் 10 லட்சம் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இவை விண்வெளி உடைகள் மற்றும் விண்வெளி வாழிடங்களிலிருந்து வெளியேறக்கூடும்.
ஆய்வில் அஸ்பெர்ஜிலஸ் நைஜர் (Aspergillus niger) என்ற பூஞ்சையும் உட்பட ஐந்து நுண்ணுயிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இது சர்வதேச விண்வெளி நிலையத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள நோபல் ரிம், கனெக்டிங் ரிட்ஜ் மற்றும் டி கெர்லாச் ரிம் பகுதிகளின் சூழலை உருவகப்படுத்தி விஞ்ஞானிகள் சோதனை நடத்தினர்.
சில நுண்ணுயிரிகள் அங்கு செயலற்ற நிலையில் உயிர்வாழக்கூடும் என முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவை சந்திரனில் வளர்ந்து பெருகுவதற்குத் தேவையான அடிப்படைச் சூழ்நிலைகள் இருப்பதற்கான ஆதாரம் தற்போது இல்லை.
