விண்வெளி வீரர்களை பிரமிக்க வைத்த அந்த காட்சி நிச்சயம் ஆச்சரியமானதும் கூட. Spacewalk சென்ற Astronauts பூமியை திரும்பப் பார்த்ததும் மெய்சிலிர்த்துவிட்ட வைத்த அந்த தருணத்தில் என்ன பார்த்தார்கள்? பார்க்கலாம்..
விண்வெளி நடைப்பயணத்தின்போது தனது ஸ்பேஸ்சூட்டில் இருந்து பூமி எப்படி காட்சியளித்தது என்பதை காட்டும் பிரமிக்க வைக்கும் புகைப்படங்களை விண்வெளி வீராங்கனை ஜெசிகா மேயர் பகிர்ந்துள்ளார்.
கடந்த வாரம் மேற்கொண்ட விண்வெளி நடைப்பயணத்தின்போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த வார விண்வெளி நடைப்பயணத்தின்போது விண்வெளி வீரர் அனிலை நான் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. மாறாக, கீழே தெரிந்த நமது கம்பீரமான தாய் பூமியின் மீது என் கவனம் சென்றது. எனது ஸ்பேஸ்சூட்டில் இருந்து அவள் இப்படித்தான் தெரிந்தாள்’ என குறிப்பிட்டுள்ளார்.

Earth
அவர் வெளியிட்ட முதல் புகைப்படத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் சூரிய மின்தகடுகளுக்கு இடையே பூமியின் கடற்கரைப் பகுதி அழகாக காட்சியளிக்கிறது. அந்தப் படத்தின் கீழ்புற இடது மூலையில் சிறிய சூரிய மின்தகடு ஒன்றும் தெரிகிறது என மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாவது புகைப்படத்தில், சமீபத்தில் நிறுவப்பட்ட IROSA மோட் கிட்-டின் பின்னணியில் சூரியன் மறையும் காட்சி இடம்பெற்றுள்ளது. இனி மேற்கொள்ளவிருக்கும் விண்வெளி நடைப்பயணங்களின்போது பொருத்தப்பட உள்ள புதிய சூரிய மின்தகடுகளுக்கான அடித்தள அமைப்பாக இந்தத் தளம் பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது புகைப்படத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் சூரிய மின்தகடுகளுக்கு இடையே மலைத் தொடர்கள் தென்படுகின்றன. விண்வெளி நடைப்பயணங்களின்போது தனது ஸ்பேஸ்சூட்டில் இருந்து பூமி பல்வேறு கோணங்களில் எப்படி தெரிகிறது என்பதை இந்தப் புகைப்படங்கள் காட்டுவதாக மேயர் விளக்கியுள்ளார்.

Earth
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “இதுபோன்ற காட்சிகளை நேரில் பார்க்க அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்” என்றும், “வாவ்! இது அற்புதமாக இருக்கிறது” என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
