
கடந்த வாரகாலமாக இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, இந்தியாவின் முதல் 10 மதிப்புமிக்க நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ. 2.99 லட்சம் கோடி குறைந்துள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இதில் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
சென்ற வாரம் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், 2,199.77 புள்ளிகள் அதாவது 2.66 சதவீதம் சரிந்தது. என்ரிச் மணி (Enrich Money) என்ற ஆன்லைன் வர்த்தகம் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொன்முடி, “H-1B விசா கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டதால் தொழில்நுட்பப் பங்குகளின் மதிப்பு வெகுவாகக் குறைந்தது. இது இந்திய ரூபாயின் மதிப்பையும் பாதித்து, அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் வரலாறு காணாத அளவில் சரிந்தது,” என்கிறார்.
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு 100% வரி விதிக்கப்பட்டதும் சந்தை உணர்வுகளைக் கடுமையாகப் பாதித்தது. இதன் தாக்கம் பல்வேறு துறைகளிலும் எதிரொலித்து, சந்தை நம்பிக்கையை வெகுவாகக் குறைத்தது, இதுவே தொடர் சரிவுக்கு காரணம் என கூறுகிறார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.97,597.91 கோடி சரிந்து ரூ.10,49,281.56 கோடியாகக் குறைந்தது. இது இந்திய நிறுவனங்களில் சந்தித்த அதிகபட்ச இழப்பாகும். ஹெச்1பி விசாவுக்கு டிரம்ப் நிர்வாகம் அதிக கட்டணம் விதித்தது இந்த சரிவுக்கு காரணம் ஆகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.40,462.09 கோடி குறைந்து ரூ.18,64,436.42 கோடியாக ஆனது. இன்ஃபோசிஸ் நிறுவனம் ரூ. 38,095.78 கோடி இழந்து, அதன் மதிப்பு ரூ. 6,01,805.25 கோடியானது. ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ.33,032.97 கோடி குறைந்து ரூ.14,51,783.29 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் மதிப்பு ரூ.29,646.78 கோடி சரிந்து ரூ.9,72,007.68 கோடியாகவும் பதிவானது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.26,030.11 கோடி குறைந்து ரூ.10,92,922.53 கோடியானது. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) ரூ.13,693.62 கோடி இழந்து அதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.5,51,919.30 கோடியானது.
இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.11,278.04 கோடி குறைந்து ரூ. 5,89,947.12 கோடியானது. பஜாஜ் ஃபைனான்ஸ் ரூ.4,977.99 கோடி சரிந்து ரூ.6,12,914.73 கோடியானது.எஸ்பிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.4,846.07 கோடி சரிந்துரூ.₹7,91,063.93 கோடியானது. இந்த சரிவுகளுக்கு மத்தியிலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் அதிக மதிப்புமிக்க நிறுவனமாகத் தொடர்ந்து நீடிக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு அடுத்தபடியாக ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எல்ஐசி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.