மேற்கு வங்கத்தில், 12 ஆண்டுகளாக மின்சாரமின்றி சிரமப்பட்ட ஒரு குடும்பத்திற்கு, 12 நாளில் மின்சாரம் வழங்கி ஒளியேற்றி வைத்துள்ளது, பாஜக அரசு.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக அரசு முதன்முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. அம்மாநில முதல்வராக சுவேந்து அதிகாரி உள்ளார். அவரது அரசு, பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மக்கள் சார்ந்த நலத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், அவர்களுடைய குறைகளையும் போக்கி வருகிறது. அந்த வகையில், 12 ஆண்டுகளாக மின்சாரமின்றி சிரமப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 12 நாளில் மின்சாரம் வழங்கி ஒளியேற்றி வைத்துள்ளது.

சுவேந்து அதிகாரி
மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தில் உள்ள பஞ்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லௌலாடா கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணா பௌரி. இவர், மிதிவண்டிகளைப் பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், தனது வீட்டுக்கு மின் இணைப்புக் கோரி 12 ஆண்டுகளுக்கு முன்பே மின்சார அலுவலகத்தை அணுகியுள்ளார். ஆனால், அண்டை வீட்டுக்காரர்களுடனான நிலத்தகராறு காரணமாக தனக்கு மின்சாரம் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டதாகவும், தொடர்ந்து பல முறை விண்ணப்பங்கள் வழங்கியபோதும் அது நிராகரிக்கப்பட்டதாகவும் இதனால் தன் மகனின் படிப்பு பாதிக்கப்பட்டதாகவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான், கடந்த ஜூலை 13ஆம் தேதி, முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் ஜனதா தர்பாரில் (மக்கள் குறைதீர்ப்பு மையம்) அவரது மனைவியும் மகளும் கலந்துகொண்டு மனு அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், இருதரப்பிலும் நிலத்தகராறு பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்க்கப்பட்டது. இதனால், 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின்சாரம் வந்த மகிழ்ச்சியில் அக்குடும்பத்தினர் பாஜக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
