இயற்கையின் பேரரணாக விளங்குபவை மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகள். அவற்றைப் பற்றிப் புதிய தலைமுறையின் காலநிலை அணி வழங்கும் தொகுப்பைக் காணலாம்.
Summary
உலகம் முழுவதும் பரந்து விரிந்த அலையாத்திக் காடுகள் பூமியின் நுரையீரலாகவும் இயற்கை பேரழிவுகளைத் தடுக்கும் அரணாகவும் விளங்குகின்றன. தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட 14 இடங்களில் உள்ள இக்காடுகள் 2004 சுனாமி, பல புயல்களில் கரையோர மக்களை காத்தன. சாதாரணக் காடுகளை விட பல மடங்கு கார்பன் உறிஞ்சும் இக்காடுகளைப் பாதுகாக்க உலக அலையாத்திக் காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் சுமார் 1 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அலையாத்திக் காடுகள், பூமியின் நுரையீரலாகவும், இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்கும் அரணாகவும் விளங்குகின்றன. தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை உட்பட 14 இடங்களில் உள்ள இக்காடுகள், 2004 சுனாமி மற்றும் தீவிரமான புயல்களின்போது கரையோர மக்களையும் இயற்கைச் சூழலையும் காத்ததை நாம் மறக்க முடியாது.

Mangrove Forests
சாதாரணக் காடுகளை விட 4 முதல் 10 மடங்கு வரை அதிக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் ஆற்றல் கொண்டவை இந்த அலையாத்திக் காடுகள். இவற்றின் இலைகள், மரங்கள் மட்டுமின்றி வேர்களும் சுவாசிக்கும் தனித்துவமான தன்மையைப் பெற்றுள்ளன.
ஆறும் கடலும் இணையும் நன்னீரும் உப்புநீரும் கலக்கும் முகத்துவாரப் பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய இந்தச் சிறப்புமிக்க மரங்களின் விதைகள், தாய்ச் செடியிலேயே 20 முதல் 40 செ.மீ வரை வளர்ந்த பிறகே மண்ணில் விழுகின்றன. பல்லுயிர்ப் பெருக்கத்தின் சொர்க்கமாகத் திகழும் இந்த அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டால், அவை சேமித்து வைத்துள்ள கார்பன் வெளியேறி சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

Mangrove Forest
இக்காடுகளைப் பாதுகாக்க 1986இல் போராடி உயிர்த்தியாகம் செய்த ஈக்வடார் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலரின் நினைவாக, யுனெஸ்கோ நிறுவனம் ஜூலை 26ஆம் தேதியை “உலக அலையாத்திக் காடுகள் தினமாக” அறிவித்துக் கொண்டாடி வருகிறது. இயற்கையின் மகத்தான கொடையான அலையாத்திக் காடுகளைப் பாதுகாக்க நாமும் உறுதியேற்போம்!
