எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடிக்குள் (எம்.வி.ஏ) அதிகரித்துவரும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், இந்த எதிர்பாராத சந்திப்பு, மகாராஷ்டிராவில் தீவிரமான அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் (சமாஜ்வாடி) தலைவர் சரத் பவாரும், மகாராஷ்டிர துணை முதல்ரும் சிவசேனா கட்சித் தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவும் சந்தித்துப் பேசியிருப்பது மாநிலத்தில் பெரும் பரபரப்பையும், பல்வேறு அரசியல் யூகங்களையும் கிளப்பியுள்ளது.
மாநிலத்தில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மகாராஷ்டிரா – கர்நாடகா எல்லைப் பிரச்னை தொடர்பான உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமை வகித்தார். அப்போது, என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார், கட்சியின் மூத்த தலைவர்களான ஜெயந்த் பாட்டீல், ஜிதேந்திர அவாத் மற்றும் சசிகாந்த் ஷிண்டே ஆகியோருடன் நேராக ஷிண்டேயின் அறைக்குச் சென்றார். பவாரின் வருகையை அறிந்ததும் ஏக்நாத் ஷிண்டே கூட்டத்தை இடைநிறுத்தி, சரத் பவாருக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், 15 நிமிடம் அவருடன் கலந்துரையாடினார். எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடிக்குள் (எம்.வி.ஏ) அதிகரித்துவரும் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில், இந்த எதிர்பாராத சந்திப்பு, மகாராஷ்டிராவில் தீவிரமான அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அதேநேரத்தில், இந்த சந்திப்பின்போது என்ன நடந்தது என்பதை இரு தலைவர்களும் வெளியிடாத நிலையிலும், ஷிண்டேயின் அலுவலகம் அதனை ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று விவரித்துள்ளது. மாநிலத்தின் நலன் மற்றும் எல்லைப் பிரச்னை சார்ந்த விஷயங்களில் தலைவர்களுக்கு இடையேயான உரையாடல்களும் தொடர்புகளும் தொடர வேண்டும் என்ற சுமுகமான அடிப்படையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம், மகாயுதி கூட்டணியின் பிரதான வியூகவாதியாகக் கருதப்படும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸைச் சந்திக்காமல், ஷிண்டேவை பவார் சந்தித்திருப்பதும் கவனம் பெற்றுள்ளது. எனினும், இதன் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் உற்றுநோக்கப்படுகின்றன. தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சியைச் சேர்ந்த சில மூத்த தலைவர்கள், தற்போதைய ஆளும்கட்சியான ‘மஹாயுதி’ அல்லது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைவது குறித்து கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படும் வேளையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அடுத்து, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (UBT) கட்சியைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) ஏக்நாத் ஷிண்டேவின் முகாமிற்குத் தாவியதால், எதிர்க்கட்சிக் கூட்டணியான ‘மகா விகாஸ் அகாடி’-க்குள் ஏற்கெனவே சலசலப்பு நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் பவாரின் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்த நிகழ்வானது, எதிர்கால அரசியல் மோதல்களுக்கு முன்னதாக, கூட்டணியின் ஒருங்கிணைப்பு குறித்து புதிய கவலைகளைத் தூண்டியுள்ளது.
