ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் கொலை பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், தன்னைக் கொலை செய்ய அந்நாடு சதித்திட்டம் தீட்டக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய பிப்ரவரி மாத தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஏற்பட்டது. தொடர்ந்து, இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் மோதல் போக்கு நீடித்து வந்தது. மேலும், எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களையும் நடத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவமும் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகுகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.

மேலும் இதனால் கோபமுற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் நிலவுகிறது. தவிர, அமெரிக்கா ஈரான் மீது தீவிர தாக்குதலையும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஈரானின் கொலைப் பட்டியலில் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், தன்னைக் கொலை செய்ய அந்நாடு சதித்திட்டம் தீட்டக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அவர்களுக்குத் தலைவர்கள் இருந்தார்கள், அவர்கள் போய்விட்டார்கள். இப்போது அவர்களுக்கு வேறு ஒரு தலைமைக் குழு இருக்கிறது. அவர்களும் போய்விடலாம். மேலும், ஒன்று தெரியுமா, நானும்கூட போய்விடலாம், ஏனென்றால் நான்தான் அவர்களின் முதன்மை இலக்கு. ஈரானின் கொலைப் பட்டியலில் நான் முதலிடத்தில் இருக்கிறேன். அவர்கள் அமெரிக்க தலைவரை வீழ்த்த விரும்புகிறார்கள். அவர்கள் மிகவும் மோசமான மற்றும் நோய்வாய்ப்பட்ட மனிதர்கள். தனது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. தனது அதிபர் பதவிக்காலம் முடிவதற்குள், தான் கொல்லப்படலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ஈரானின் அணுஆயுதத் திட்டங்களைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கும் ட்ரம்ப், இந்த படுகொலை அச்சுறுத்தல்களால் அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து, தான் அமெரிக்காவால் கொல்லப்படலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துவரும் நிலையில், கடந்த காலங்களில் சில தாக்குதல்களிலிருந்து நூலிழையில் அவர் உயிர் தப்பியும் வருகிறார். அதேநேரத்தில், ”தாம் ஈரானால் படுகொலை செய்யப்பட்டால், அந்நாட்டை இந்தப் பூமியிலிருந்தே முழுமையாக அழித்துவிட வேண்டும்” என முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
