எனினும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கெய்ர் ஸ்டார்மர் தற்காலிகமாகப் பிரதமர் பொறுப்பில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசியல் வட்டாரத்தில் அதிரடி திருப்பமாக, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று, கெய்ர் ஸ்டார்மர் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், வெறும் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே அவர் தனது பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் பொருளாதார மந்தநிலை, கொள்கை முடிவுகளில் ஏற்பட்ட சறுக்கல்கள் மற்றும் சில சர்ச்சைக்குரிய நியமனங்கள், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடனான உறவில் ஏற்பட்ட விரிசல் உள்ளிட்ட காரணங்களால் கெய்ர் ஸ்டார்மரின் செல்வாக்கு மக்களிடமும், அவரது சொந்தக் கட்சியினரிடமும் வேகமாகச் சரிந்தது. மேலும், பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மற்றும் பிராந்தியத் தேர்தல்களில் ஆளும் தொழிற்கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக 1999-க்குப் பிறகு முதல்முறையாக வேல்ஸ் பகுதியில் தொழிற்கட்சி ஆட்சியை இழந்தது. மேலும், ‘மேக்கர்ஃபீல்டு’ நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவும் ஸ்டார்மருக்குப் பலத்த அடியைத் தந்தது. இந்தத் தேர்தலில் ஸ்டார்மருக்குப் போட்டியாகக் கருதப்படும் முன்னணித் தலைவரும், கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயருமான ஆண்டி பர்னம் 55% வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் நுழைந்தார்.

keir starmer
இந்த வெற்றியால், தொழிற்கட்சியின் அடுத்த தலைவராக ஆண்டி பர்னத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் அக்கட்சிக்குள் தீவிரமடைந்தன. இதனால், கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்கிற குரல்களும் வேகம்பிடித்தன.
இதையடுத்து, சில ஜூனியர் அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஸ்டார்மரை பதவி விலகக் கோரினர். தொடர்ந்து, கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகுவதற்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என அவரது அமைச்சரவை சகாக்களே கோரிக்கை விடுத்தனர். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, கெய்ர் ஸ்டார்மர், “நான் பதவி விலகப் போவதில்லை” என உறுதியாகத் தெரிவித்திருந்தனர். இருப்பினும், தொழிற்கட்சியின் 90-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் அவருக்கு எதிராக இருந்தனர்.

keir starmer
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ”இங்கிலாந்து பிரதமர் பதவியிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் விலகுவார். குடிவரவு மற்றும் எரிசக்தி ஆகிய இரண்டு மிக முக்கியமான விஷயங்களில் அவர் நேரடியாகத் தோல்வியடைந்துவிட்டார். அவருக்கு என் வாழ்த்துகள்” என அவர் பதிவிட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில்தான் அதிரடி திருப்பமாக, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தனது ராஜினாமா குறித்து கெய்ர் ஸ்டார்மர், “அடுத்த பொதுத்தேர்தலில் கட்சியை வழிநடத்த நான் தகுதியானவனா என்ற கேள்வி என் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் அந்தப் பதிலைக் கேட்டு, அதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். நான் நேசிக்கும் இந்த நாட்டிற்கு முன்னுரிமை அளித்தே எனது ஒவ்வொரு முடிவும் இருந்தது. எனவே, தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

keir starmer
எனினும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, கெய்ர் ஸ்டார்மர் தற்காலிகமாகப் பிரதமர் பொறுப்பில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சித் தேர்தல் செயல்முறைகள் வரும் ஜூலை 9, 2026 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கட்சியின் அடுத்த தலைவராக ஆண்டி பர்னம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஆண்டி பர்னம் பிரிட்டனின் அடுத்த பிரதமராவதற்கான முதன்மைப் போட்டியாளராக உருவெடுத்துள்ளார். அவருக்கு மற்றுமொரு முக்கியத் தலைவரான வெஸ் ஸ்ட்ரீட்டிங்ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆண்டி பர்னம் போட்டியின்றி ஜூலை நடுப்பகுதியிலேயே பிரதமராகப் பொறுப்பேற்கவும் வாய்ப்புள்ளது. இதன்மூலம், பிரிட்டன் கடந்த 10 ஆண்டுகளில் தனது 7-ஆவது பிரதமரைக் காணத் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
