தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.
Summary
ஈரானின் தெற்குப் பகுதியான பந்தர் அப்பாஸ், ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதலில் ஈரானின் நான்கு ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன. இதற்கு பதிலடி அளித்த ஈரான், அமெரிக்க விமானத் தளம் மற்றும் ரேடார் அணைத்துக் கொண்டு சென்ற அமெரிக்க எண்ணெய் கப்பலை குறிவைத்து தாக்கியது. குவைத் மீதும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் நடந்ததாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்தசூழலில் போர் மீண்டும் உயிர்பெறுகிறதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டு சேர்ந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுத்த நிலையில், போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அதோடு உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கியது.

சுமார் 1 மாதத்துக்கும் மேல் நடந்த இந்த போர் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் பேரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதே நேரம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் எந்த உடன்படும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கியத் துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) மற்றும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் 4 தாக்குதல் ட்ரோன்களை வீழ்த்ததாகவும், ஈரானின் தரைக்கட்டுப்பாட்டு மையத்தின் (Ground control station) மீதும் வான்வழித் தாக்குதலை நடத்தியததாகவும் அமெரிக்க ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உடனடியாகப் பதிலடி கொடுத்ததாக அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ விமானத் தளம் (US Airbase) ஒன்றின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், ஹோர்முஸ் நீரிணையில் ரேடாரை அணைத்துவிட்டுச் செல்ல முயன்ற அமெரிக்க எண்ணெய் கப்பல் (Tanker) ஒன்றின் மீதும் ஈரான் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த மோதல்களின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான குவைத் (Kuwait) மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக குவைத் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படி இந்த போர் மீண்டும் தொடங்கியுள்ளதால் அந்த பிராந்தியத்தில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
