உக்ரைனில் உள்ள ஆய்வகங்கள் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தொற்று நோய்களைக் கண்காணிப்பதற்கும் மட்டுமே பயன்படுகின்றன.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றாலும், இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுவதை மட்டும் குறைத்துக் கொள்வதே இல்லை. அந்த வகையில், அமெரிக்காவின் நிதியுதவியுடன் உக்ரைனில் ரகசிய உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் நிதியுதவியுடன் உக்ரைனில் ரகசிய உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. உக்ரைனில் உள்ள ஆய்வகங்கள் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், தொற்று நோய்களைக் கண்காணிப்பதற்கும் மட்டுமே பயன்படுகின்றன.

புதின், ஜெலன்ஸ்கி
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, ஆபத்தான நோய்க்கிருமிகள் பரவாமல் தடுக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இந்த ஆய்வகங்களுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றன. ஆனால், உக்ரைனில் உள்ள பல ஆய்வகங்கள், அமெரிக்க ஆதரவுடைய ஒரு பரந்த உயிரியல் வலையமைப்புடன் தொடர்புடையவை என்று ரஷ்ய அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த ஆய்வகங்கள், பொது சுகாதார ஒத்துழைப்பு என்ற போர்வையில் இராணுவ-உயிரியல் பணிகளை மேற்கொண்டதாக ரஷ்யா தெரிவிக்கிறது. இந்த ஆய்வகங்களில் பிளேக், ஆந்த்ராக்ஸ், புருசெல்லோசிஸ் மற்றும் துலரேமியா போன்ற ஆபத்தான நோய்களைப் பயன்படுத்தி உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்படுவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. மேலும், அமெரிக்கா உக்ரைனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இனங்களைக் குறிவைத்து உயிரியல் தாக்குதலுக்குத் திட்டமிட்டதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ஜெலன்ஸ்கி, புதின்
நோய்க்கிருமிகள் குறித்த ஆராய்ச்சி, அத்துடன் வலசை செல்லும் பறவைகள் மற்றும் வௌவால்கள் தொடர்பான ஆய்வுகள் ஆகியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும். இதற்கான ஆவணங்களையும் ஆராய்ச்சித் திட்டங்களையும் ரஷ்ய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தத் திட்டங்கள் ரஷ்யாவிற்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாக அந்நாடு வாதிடுவதுடன், இதன் உண்மையான நோக்கத்தை மேற்கத்திய நாடுகள் மறைப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், உக்ரைன், அமெரிக்கா, மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை எனத் தெரிவித்துள்ளன.
