30 வருடங்களுக்கு முன் இருந்த அழகு பற்றிய வரையறைகள் வேறு, இன்று உள்ள அழகின் வரையறைகள் வேறு.
பிரபல நடிகை ப்ரியா பவானி சங்கர் இன்று ஒரு தனியார் எடைக் குறைப்பு சிகிச்சை மைய திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் அழகு, ஃபேஷன் போன்றவற்றில் தன்னம்பிக்கை எவ்வளவு முக்கியம் எனக் கேள்வி கேட்கப்பட, அதற்குப் பதில் சொன்ன ப்ரியா, “80 சதவீதம் தன்னம்பிக்கை அடிப்படையில்தான் இயங்குகிறது. மற்ற எல்லாமே அதன் வழி வரக்கூடியவையே. இது எல்லாமே காலத்துக்கு ஏற்ப மாறக்கூடிய விஷயங்கள்தான். 30 வருடங்களுக்கு முன் இருந்த அழகு பற்றிய வரையறைகள் வேறு, இன்று உள்ள அழகின் வரையறைகள் வேறு. இனி வரப்போவதும் வேறு. ஆனால், தன்னம்பிக்கை என்பது நிரந்தரமானது.

PBS
நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மைக்கூட உனக்கு இவ்வளவு போதும் என்பார்கள், சில நேரம் அது நம் நல்லதுக்காகக்கூட இருக்கலாம். ஆனால், நமக்கு என்ன சரி, எது தேவை என நாம்தான் முடிவு செய்ய வேண்டும். Satisfy ஆவது வேறு Settle ஆவது வேறு. இப்படி இருந்தால்தான் அழகு, இதுதான் அழகு எனச் சொன்னால் அதனை ஏற்றுக் கொள்ளாதீர்கள். அங்குதான் தன்னம்பிக்கை தேவை என நினைக்கிறேன். இதில் Influencers தாக்கம் என்பது அதிகரித்துள்ளது. இப்போது இது சார்ந்த விளம்பரங்கள்கூட குறைவே. அதே சமயத்தில், பார்வையாளர்களுக்கும் அது புரிய ஆரம்பித்துவிட்டது. ஒரு 5 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் இதை வாங்குங்கள் என்று சொன்னால் வாங்கி இருக்கலாம். இப்போது அந்த மனநிலை மாறிவிட்டது. பணம் பெற்றுத்தான் அவர்கள் பேசுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டனர். எனவே, இப்போது ஒரு தரமான பொருளை விளம்பரம் செய்ய மட்டுமே Influencers தேவை. அது விற்பனையாக அந்தப் பொருளின் தரம்தான் முதன்மையாக இருக்கிறது” என்றார்.
