நாடு முழுவதும் கடந்த 15ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா ரூ. 3 உயர்த்தியது. இந்த பரபரப்பான சூழலில், அடுத்த ஐந்தே நாட்களில் அதாவது இன்றைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மீண்டும் ஏற்றியுள்ளன.
Summary
சர்வதேச அரசியல் பதற்றம், ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை பாய்ந்ததால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் 104.54, டீசல் 94.05 ரூபாயாக விற்பனை ஆகும் நிலையில், நேமுரா அறிக்கை படி எண்ணெய் நிறுவன நஷ்டத்தை சமநிலைப்படுத்த வருங்காலத்தில் லிட்டருக்கு மேலும் 25 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று அமலுக்கு வந்துள்ள புதிய விலை உயர்வின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 91 காசுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 104 ரூபாய் 54 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 05 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இதோடு இந்த விலை உயர்வு நின்றுவிடப் போவதில்லை என்றும், எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைத் தவிர்க்க பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரும் நாட்களில் மேலும் 25 ரூபாய் வரை உயரலாம் என்றும் சர்வதேச நிதி சேவை நிறுவனமான நேமுரா (Nomura) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல புது டெல்லியில் பெட்ரோல் 98 ரூபாய் 64 காசுகளாகவும், மும்பையில் 107 ரூபாய் 59 காசுகளாகவும், கொல்கத்தாவில் 109 ரூபாய் 70 காசுகளாகவும் உயர்ந்துள்ளது.
இந்த திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் சர்வதேச அரசியலும், கடல்வழி விநியோகத் தடைகளும் முக்கியக் காரணமாக இருக்கின்றன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியதைத் தொடர்ந்து, உலகிலேயே மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் நாடு முடக்கியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டு எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலைமுகநூல்
இந்த நெருக்கடியை எதிர்கொள்ள இந்திய அரசு ரஷ்யா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளிடமிருந்து கூடுதல் பிரீமியம் விலை கொடுத்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. ஆனால், இந்தியாவில் 5 மாநில சட்டசபை தேர்தல் நடந்து வந்த காரணத்தால், பொதுமக்களின் அதிருப்தியைத் தவிர்க்கும் பொருட்டு கடந்த 11 வாரங்களாக எரிபொருள் விலையை மத்திய அரசு உயர்த்தாமல் அப்படியே முடக்கி வைத்திருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான், நாட்டு மக்கள் அனைவரும் எரிபொருளை மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் கொரோனா காலத்தைப் போல தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தியிருந்தார்.
அதிர்ச்சி அறிக்கை..
தற்போது தேர்தல் முடிந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் விலையை மீண்டும் உயர்த்தத் தொடங்கியுள்ளன. கடந்த வாரம் 3 ரூபாய் உயர்த்தப்பட்ட போதிலும், அது நிறுவனங்களின் ஒட்டுமொத்த உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் செலவை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை என்று பொருளாதார வல்லுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. நேமுரா (Nomura) மற்றும் எலாரா கேபிடல் (Elara Capital) நிறுவனங்களின் கூட்டு ஆய்வு அறிக்கையின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விற்பனை மூலம் இந்திய ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய அரசு நிறுவனங்களுக்கு தினமும் 1,380 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ஆட்டோ எரிபொருட்கள் மட்டுமின்றி, சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு அரசு நிறுவனங்களுக்கு 420 ரூபாய் முதல் 670 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுவதால், LPG மூலம் மட்டுமே தினமும் 200 முதல் 400 கோடி ரூபாய் வரை இழப்பு நீடிக்கிறது. மேலும், விமான எரிபொருள் விலையிலும் மாற்றம் இல்லாததால் கூடுதல் நிதி நெருக்கடி உருவாகியுள்ளது.
தற்போதைய இந்த பெரும் நஷ்ட வீதம் இப்படியே தொடர்ந்தால், நஷ்டத்தைத் தாங்க முடியாமல் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளிலும், பாரத் பெட்ரோலியம் அடுத்த 4 ஆண்டுகளிலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அடுத்த 10 ஆண்டுகளிலும் தங்களது மொத்த முதலீட்டையும் இழந்து முடங்கும் அபாயம் இருப்பதாக நேமுரா எச்சரித்துள்ளது.
இதில் சுத்திகரிப்பு திறனைக் காட்டிலும் சமையல் மற்றும் சில்லறை விற்பனைச் சந்தையில் அதிகப் பங்கைக் கொண்டுள்ளதால் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஒரு பேரலுக்கு 19 டாலர் வரை நஷ்டமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதேநேரம் வலுவான டீசல் உற்பத்தி மற்றும் குறைவான சில்லறை விற்பனை காரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பேரலுக்கு 4 டாலர் நஷ்டத்துடன் ஓரளவு சாதகமான நிலையில் உள்ளது. திரவ எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக உள்நாட்டில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு ஐ.ஜி.எல் (IGL) மற்றும் எம்.ஜி.எல் (MGL) நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. இருப்பினும், நிறுவனங்கள் இவ்வளவு பெரிய நஷ்டத்தைச் சந்தித்த போதிலும், ஓ.எம்.சி (OMC) பங்குகளின் மதிப்பு பங்குச்சந்தையில் பிரீமியம் விலையில் வர்த்தகமாவது சந்தை வல்லுநர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Petrol
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து இதே உச்சத்தில் நீடித்தால், கடந்த 2022-ஆம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரின் போது செய்தது போல, எண்ணெய் நிறுவனங்களைக் காப்பாற்ற வரும் நாட்களிலும் தினமும் சில காசுகள் வீதம் பெட்ரோல், டீசல் விலையைச் சிறுகச் சிறுக உயர்த்த அரசு திட்டமிடலாம் என்று சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
