கேரள தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள் யார்யார் என்பது குறித்து பார்ப்போம்.
1977ஆம் ஆண்டிலிருந்து கேரளத்தில் இடதுசாரிகளும் காங்கிரசும் மாறிமாறி ஆண்டுவந்த நிலையில் 2021இல் அச்சங்கிலி உடைபட்டது. பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு 2ஆவது முறையாக தொடர்ந்து வெற்றிபெற்றது. 3ஆவது முறையாக ஆட்சியை தொடர ஆளுங்கட்சி முயற்சிக்கும் நிலையில் மீண்டும் ஆட்சிக் கட்டிலேற காங்கிரஸ் காய்நகர்த்திவருகிறது. 140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டமன்றத்தில் ஆளும் இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி என 3 அணிகள் களம் காண்கின்றன. இந்த நிலையில், கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர்கள் குறித்துப் பார்க்கலாம்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல்
முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் களமிறங்கியுள்ளார். மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தலிபரம்பா தொகுதியில் போட்டியிடுகிறார். மூத்த அமைச்சர் கே. என்.பாலகோபால் கொட்டாரக்கராவிலும் மற்றொரு மூத்த அமைச்சர் பி.ராஜீவ் கலமசேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா பெரவூர் தொகுதியில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சி தலைவரும் முதல்வர் வேட்பாளராக கருதப்படுபவருமான வி.டி.சதீசன் பெரவூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஹரிபாட் தொகுதியில் களம் கண்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகன் முரளீதரன் வட்டியூர்காவு தொகுதியில் களமிறங்கியுள்ளார். மற்றொரு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். முஸ்லீம் லீக் மூத்த தலைவர் பி.கே.குனாலிக்குட்டி மலப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் மாநில தலைவர் கே.சுரேந்திரன் மஞ்சேஸ்வர் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்திலுள்ள நேமம் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால் திருச்சூரில் போட்டியிடுகிறார்.
