`என் தாய் மொழி தெலுங்காக இருந்தாலும், எனக்கு தெலுங்கு சரியாக பேச வராது’ என சொல்லித்தான் பேச்சை துவங்க நினைத்தேன். அப்போது பின்னால் இருந்தவர் என்னிடம் நீங்கள் நாயுடு பையனா எனக் கேட்டார். ஆம் என்று கூறினேன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன். தற்போது இவர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘உஸ்தாத் பகத் சிங்’ல் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பான Pre Release நிகழ்வில் பார்த்திபன் தன் சாதியை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து வந்த எதிர்ப்புகளுக்கு வீடியோ, மற்றும் விளக்க குறிப்புகள் மூலம் மன்னிப்பு கோரினார் பார்த்திபன். இப்போது மீண்டும் ஒரு வீடியோவை இது தொடர்பாக வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் பார்த்திபன்
அதில் “என் தந்தையுடைய மறைவுக்கு பிறகு சில நாட்கள், அல்லது சில படங்களால் ஏற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்துக்கு பிறகும் கூட நான் இடிந்து போய் உட்கார்ந்தது கிடையாது. இந்த ஒரு ஏழெட்டு நாட்கள் சமூக வலைதளத்தின் பாதிப்பினால், நான் சமூகத்தையும், சமூக வலைத்தளங்களை மதிப்பதினாலும் அது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை வருடங்களில் நான் என் பிறப்பு பற்றி பெருமையாய் நினைத்தது கிடையாது. அதை நான் அறவே வெறுப்பவன். என்னுடைய எல்லா படங்களிலும் சாதி தேவை இல்லை என்பதை பேசி இருக்கிறேன்.
என் தாய் மொழி தெலுங்காய் இருந்தாலும், நான் தமிழ் இவ்வளவு அழகாய் பேசுகிறேன் என்பது வேண்டுமானால் எனக்கு பெருமையாய் இருக்கலாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட இதை சொல்லி இருந்தேன். வீட்டில் தெலுங்கு பேச வேண்டும் என சொன்ன என் அப்பா கூட, நான் தமிழ் படத்தில் நடிக்கிறேன் என சொன்னதும், தமிழ் மொழியை சரியாக கற்றுக் கொள் என்று தான் சொன்னார். என்னை இப்போது திட்டுபவர்கள் கூட இவ்வளவு அழகாய் தமிழ் பேசுபவர் சாதி பெருமை பேசுகிறாரே என்கிறார்கள், அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
அது போல ஒருமுறை கூட என் வாழ்நாளில் சொன்னதே இல்லை. ஒரு முறை கூட சொல்லாதவன், ஒரு மேடையில் ஒரே ஒருமுறை சொல்லும்போது, அதற்கு பின்னணி காரணம் இருக்கிறது என சொல்லப்படுவது எனக்கு அவமானமாக இருக்கிறது. அந்த தெலுங்கு மேடையில் நான் தெலுங்குக்காரன் என சொல்வதால் எனக்கு என்ன லாபம்? சிலபேருக்கு அப்படி பெருமை இருக்கலாம், எனக்கு அப்படி இல்லை. நான் அன்று மிகவும் டென்ஷனாக இருந்தேன். நான் தமிழ் பேசும் மேடையில் எனக்கு முன்தயாரிப்பு எதுவும் தேவை இல்லை, கடகடவென பேசுவேன். ஆனால் தெலுங்கில் பேச வேண்டும், முன்னால் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உட்பட முக்கியமான ஆளுமைகள். நம் வார்த்தை எதுவும் தவறாக வந்துவிடக்கூடாது என அதில் கவனமாக இருந்தேன். பேப்பரில் கூட எழுதி எடுத்துக் கொண்டு போனேன்.

Parthiban
`என் தாய் மொழி தெலுங்காக இருந்தாலும், எனக்கு தெலுங்கு சரியாக பேச வராது’ என சொல்லித்தான் பேச்சை துவங்க நினைத்தேன். அப்போது பின்னால் இருந்தவர் என்னிடம் நீங்கள் நாயுடு பையனா எனக் கேட்டார். ஆம் என்று கூறினேன். தெலுங்கு என சொல்வதற்கு பதில், நாயுடு என்பது மண்டையில் பதிந்து போனது. எனவே மேடையில் பேசும்போது எனக்கு அந்த வார்த்தை ஒருமுறைக்கு இருமுறையாக வந்துவிட்டது. அது இவ்வளவு பெரிய எதிர்வினையை ஏற்படுத்தும் என நினைக்கவே இல்லை. அதற்கு மனப்பூர்வ மன்னிப்பு தெரிவித்தும் யாரும் விடுவதாய் இல்லை. உண்மையிலேயே எனக்கு சாதி வெறி இருந்தால், நான் அப்படியே கமுக்கமாக இருந்திருப்பேன். ஆனால் நான் அப்படி இல்லை என்பதால் எனக்கு இது உறுத்தலாக இருந்தது.
கடைசியாக வெளியிட்ட அறிக்கையில் என்னுடைய பிறப்பு சான்றிதழை மாற்ற முடியுமா? எனக் கேட்டேன். பின்னர் உண்மையிலேயே எனக்கு சாதியையும் மதமும் இல்லை என்பது என் விருப்பமாக இருக்கையில் அதை மாற்ற ஏன் நான் முயற்சிக்க கூடாது. அதற்காக நான் பலருடன் பேசி கண்டறிந்த விஷயம் என்ன என்றால் 1973ல் ஒரு அரசு ஆணையை நிறைவேற்றி இருக்கிறார்கள். சாதி இல்லை என்ற சான்றிதழ் கொடுக்கலாம், குறிப்பாக பள்ளியில். இது பள்ளிக்கு தான், என்னை போன்ற ஒரு வளர்ந்த நபர் அதனை வாங்கியதில்லை. 2022ல் கூட ஒரு ஜோடி தங்கள் குழந்தைக்கு இந்த சான்றிதழ் பெற்றுள்ளனர். இதெல்லாம் எனக்கு ஒரு தெம்பை கொடுத்தது. பின்னர் நான் ஒரு மனுவை தயார் செய்து அரசு அலுவலகத்துக்கு போனேன். இப்போது தேர்தல் சமயம் என்பதால் அதன் பணிகளில் இருக்கிறார்கள். அது முடிந்ததும் ஒரு அரசாணை வந்தால் தான் இதை செய்ய முடியும் என புரிந்து கொண்டேன்.

பார்த்திபன்
இருந்தாலும் ஒரு ஆலோசனைப்படி ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்ய சொன்னார்கள். அதில் `எந்தவிதமான அழுத்தமும், கட்டாயமும் இல்லாமல் என் சொந்த விருப்பத்தினால் நான் எனது ஜாதி அடையாளத்தையும் மத அடையாளத்தையும் முற்றிலும் துறக்க முடிவு செய்துள்ளேன். இச்சத்தியப்பிரமாணப் பத்திரம் செய்யப்பட்ட நாளிலிருந்து நான் எந்த ஜாதிக்கும் அல்லது எந்த மதத்திற்கும் சேர்ந்தவன் அல்ல. ஜாதி அல்லது மதத்தின் அடிப்படையில் அரசாங்கம் வழங்கும் எந்தவொரு சலுகை, ஒதுக்கீடுளையும் நான் கோரமாட்டேன் என்று அறிவிக்கிறேன். எனது நிலையை அரசாங்க பதிவுகளில் “ஜாதி இல்லை – மதம் இல்லை” (No caste No religion) என்று பதிவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிவுடன் கோருகிறேன்.
இச்சத்தியப்பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் என் அறிவின்படியும் நம்பிக்கையின்படியும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.’ எனக் குறிப்பிட்டுள்ளேன். இதன்படி எனக்கு சாதி இல்லை என்ற சான்றிதழ் வந்தது என்றால், திரையுலகில் இதனை பெரும் முதல் நபர் நானாக தான் இருப்பேன். இதுதான் எனக்கு பெருமை.” எனப் பேசியுள்ளார் பார்த்திபன்.
