நான் ரஜினி சாருக்கு என உருவாக்கிய கதையை சென்று கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்தது. இடைவேளை காட்சியை எல்லாம் அசையாமல் இருந்து கேட்டார். உணவு சாப்பிடக் கூட செல்லாமல் கதையை கேட்டார்.
`ஓ மை கடவுளே’, `டிராகன்’ போன்ற படங்கள் மூலம் கவனம் குவித்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து சிம்பு நடிப்பில் படம் இயக்க உள்ளார். தற்போது ரஜினி நடிப்பில் சிபி இயக்கவுள்ள தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு முன்பு அஷ்வத்துக்கு தான் கிடைப்பதாய் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது தவறிப்போனது. இதனை பற்றி சமீபத்திய பேட்டியில் அவரே கூறியுள்ளார்.
அஷ்வத் இது பற்றி கூறுகையில் “டிராகன் படம் பார்த்து வாழ்த்த ரஜினி சார் அழைத்திருந்தார். அப்போது படத்தின் பல விஷயங்கள் குறித்து வெகுவாக பாராட்டினார். அப்போது அவருக்கு கதை இருக்குமா எனக் கேட்டிருந்தார், இருக்கிறது சார் ஆனால் கமிட்மென்ட் இருக்கிறது என சொன்னேன். சிம்பு படத்திற்கான கதையில் ஒரு இடத்துக்கு மேல் நகர முடியாத சூழல் வந்தது. இதற்கான தீர்வு கிடைக்கும் வரை வேறு ஒரு கதையை ஆரம்பிக்கலாம் என துவங்கினேன். அப்போதுதான் ரஜினி சாருக்கான கதை தேவை என்ற விஷயம் தெரிந்தது.

Rajinikanth
நான் ரஜினி சாருக்கு என உருவாக்கிய கதையை சென்று கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்தது. இடைவேளை காட்சியை எல்லாம் அசையாமல் இருந்து கேட்டார். உணவு சாப்பிடக் கூட செல்லாமல் கதையை கேட்டார். கதை மிகச்சிறப்பாக இருக்கிறது, வில்லன் பாத்திரம் இன்னும் சிறப்பு எனப் பாராட்டினார். எல்லாமே நடக்கும் என்ற நிலையில் சில காரணங்களால் தவறிப்போனது.
ஆனால் இந்தக் கதையை வைத்திருங்கள், நான் அல்லது கமல் மாதிரி நபர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் எனக் கூறினார் ரஜினி சார். ராஜ் கமல் நிறுவனத்திற்கும் கால் செய்து இந்தக் கதையை பாராட்டி சொல்லி இருக்கிறார். இது படமாகலாம், என்ன வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் நான் ரஜினி சாருக்கு ஒன்லைன் சொல்லி, அதனை கதையாக 1.45 மணிநேரம் சொல்லி இருக்கிறேன். அது அவருக்கு பிடித்திருக்கிறது என்பதே எனக்கு பெரிய மகிழ்ச்சி.
இதை தாண்டி ரஜினி சாரை பற்றி ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இந்தக் கதை ரெடியாக இருக்கிறது என ஞாயிற்றுக் கிழமை கூறினேன். திங்கட்கிழமை காலையில் என்னை கதை சொல்ல அளித்துவிட்டார். நான் சொன்ன நேரத்தை விட சீக்கிரம் சென்று தான் எனக்கு பழக்கம். அங்கு சென்றால் அதற்கும் முன்பாக அவர் எனக்காக காத்திருந்தார். அவர் எப்போதும் இயக்குநர்களை பெரிதும் மதிப்பார். வயது வித்தியாசம் இன்றி வாங்க போங்க என்றுதான் பேசுவார். நான் சென்ற நேரத்தில் ஒரு முக்கியமான தலைவர் ஒருவர் அவரை பார்க்க வந்திருக்கிறார். நான் வந்ததும் என்னிடம் இதை சொல்லி ஒரு 20 நிமிடம் மட்டும் கொடுங்கள் வந்து விடுகிறேன் என சொல்லி மன்னிப்பு கேட்டு போனார். இது கூட விஷயம் இல்லை.

அஷ்வத் மாரிமுத்து
இப்போது நானும், வந்திருக்கும் தலைவரின் தொண்டர்களும் வெளியே காத்திருக்கிறோம். நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். திடீரென ரஜினி சாரின் மேனேஜர் வந்து `டைரக்டர் கிட்ட சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க’ என சொல்ல சொன்னதாக சொல்கிறார். அவரே நேரடியாக சொல்லிவிட்டாரே என்றேன். இல்லை உங்களுக்கு கொடுத்த நேரத்தில், வேறொருவரை சந்திக்க சென்றதும், உங்களை காத்திருக்க வைப்பதும் அவருக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, அதனால் சொல்ல சொன்னார் என்றார். அவர் சொன்னால் நாள்கணக்காக காத்திருக்க ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர் போன பத்தாவது நிமிடத்தில் மறுபடி மன்னிப்பு கேட்க ஆள் அனுப்புகிறார். அதன் பிறகு அவரே ஒரு ஐந்து முறை மன்னிப்பு கேட்டுவிட்டார், வெறும் பத்து நிமிட தாமதத்திற்கு. சினிமாவில் 75வது வயதிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றால் அது ஏன் என அப்போதுதான் புரிந்தது.” என்றார்.
