சென்னையில் நள்ளிரவில் மழை இடியுடன் கூடிய மழை பெய்ததால் நகரத்தில் குளிர்ந்த சூழல் நிலவியது.
Summary
சென்னையில் நள்ளிரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. திருவள்ளூரில் பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கிருஷ்ணகிரி, தேனி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் மழை!
சென்னையில் நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இரவு முழுவதும் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது.
கிண்டி, வடபழனி, கோடம்பாக்கம், திநகர், பல்லாவரம், வேளச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், ஒரு சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதேப் போன்று ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, அனகாபுதூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது
சென்னையை தொடர்ந்து திருவள்ளூரிலும் நள்ளிரவில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. கடம்பத்தூர், திருப்பாச்சூர், பாண்டூர், மணவாளநகர், ஈக்காடு, அரண்வாயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தினங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், நள்ளிரவில் திடீரென பெய்த மழையால், பூமி குளிர்ச்சி அடைந்து இதமான சூழல் நிலவியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டி மழை!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி நகர்ப்பகுதி மட்டுமின்றி புறநகர் பகுதிகளான கட்டிக்கான பள்ளி, தாளப்பள்ளி, கங்கலேரி, வெங்கட்டாபுரம், மோட்டூர் உள்ளிட்ட இடங்களிலும் மாலையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

இதேப் போன்று சேலம் மாவட்டத்தில் மேட்டூர், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் மழைபெய்தது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தர்மபுரிமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்பெய்த திடீர் மழையால் பொதுமக்கள்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பூரில் ஆலங்கட்டி மழை..
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த ஆலங்கட்டி மழை மழையில் நனைந்தவாறு பொதுமக்கள் மகிழ்ச்சியாக விளையாடினர்.
இதே போன்று கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறுஇடங்களில் பரவலாக மழை பெய்தது. காலை முதல் வெப்பம் காணப்பட்ட நிலையில், திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
அதேப்போல தேனி மாவட்டம் கண்டமனூர், மரிக்குண்டு, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
