
திமுகவின் முப்பெரும் விழா கரூரில் இன்று நடைபெறும் நிலையில், முப்பெரும் விழா என்றால் என்ன? அவ்விழா கொண்டாடப்படுவதற்கான அவசியம் என்ன என்பது குறித்து வரலாற்று நோக்கில் பார்க்கலாம்!
Summary
திமுகவினரைப் பொறுத்தளவில், முப்பெரும் விழா அவர்களுக்கு முக்கியமான ஒன்று. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில், கரூரில் இன்று நடைபெறும் முப்பெரும் விழா, இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதுபற்றி நாம் பார்ப்போம்!
திராவிட இயக்கத்தினரின் விசேஷமான மாதம் செப்டம்பர்!
வரலாற்றில் ஒவ்வோர் இயக்கத்துக்கும் சில மாதங்கள் விசேஷமானதாக அமைவதுண்டு. திராவிட இயக்கத்தினரைப் பொறுத்த அளவில், அப்படியான ஒரு மாதம் என்றால், அது செப்டம்பர்தான். திராவிட இயக்கத்தினர் மிக முக்கியமான பல முடிவுகளை எடுத்த, முக்கியமான திட்டங்கள் அல்லது முழக்கங்களை வகுத்த, வரலாற்றில் சில முக்கியமான தொடக்கங்களை முன்னெடுத்த மாதம் என்பதோடு திராவிட இயக்கத்தின் இரு பெரும் தளகர்த்தர்களும் ஒரு பேரியக்கமும் தோன்றிய மாதமும் இது! இன்றைய திராவிட இயக்கத்தின் முதல் முக்கியமான சமூக, அரசியல் வெளிப்பாடு என்று எடுத்துக் கொண்டால், அது சென்னை திராவிடர் சங்கம் என்று பெயரிடப்பட்ட மெட்ராஸ் யுனைட்டட் லீக்தான்! 1912 அக்டோபரிலும் தொடர்ந்து நவம்பரிலும் அடுத்தடுத்த பெயர்களைச் சூடிக்கொண்ட இந்த இயக்கத்தின் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டது 1912 செப்டம்பரில்தான்!

கரூர் திமுக முப்பெரும் விழா
இந்தியத் துணை கண்டத்தையே பிற்காலத்தில் சுழற்றி அடிப்பதாக மாறிய சமூக நீதி அரசியலுக்கு முன்மாதிரியாக “அரசுப் பணிகளில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றம்பெறும் வகையில் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும்” எனும் வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான முன்னோடி அரசாணையை நீதிக் கட்சி பிறப்பித்தது, 1921, செப்டம்பரில்தான்! திராவிட இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான செயல்பாடு, தமிழைக் காக்கும் பணியில் அது களம் இறங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம். பிரிட்டிஷ் இந்தியாவில், சென்னை மாகாணத்தில் இந்தி திணிப்பு நடவடிக்கையில் ராஜாஜி அரசு இறங்கியதைத் தொடர்ந்து, தந்தை பெரியாரும் முன்னின்று நடத்திய முக்கியமான கூட்டம், கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் பங்கெடுத்த கூட்டம் சென்னையில் நடந்தது. மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியும் பெரியாரும் இணைந்து நின்று ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிய இந்தக் கூட்டம் நடந்தது, 1938 செப்டம்பரில்தான்!
ஏன் முப்பெரும் விழா முக்கியமானதாகிறது?
திராவிட இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களான பெரியாரும், அண்ணாவும் பிறந்தது செப்டம்பரில்தான். பெரியாரிடமிருந்து முரண்பட்டு தி.க.விலிருந்து பிரிந்து வந்த அண்ணா, திமுகவைத் தொடங்கியதும் செப்டம்பரில்தான். 1879 செப்டம்பர் 17, பெரியார் பிறந்த நாள்; 1909 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், 1949 செப்டம்பர் 17 திமுக பிறந்த நாள்… இந்த மூன்று நாட்களையும் கொண்டாடும் சாக்கில், திராவிட இயக்க வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கடத்தும் நோக்கில்தான் முப்பெரும் விழாவை 1974இல் அறிமுகப் படுத்தினார் திமுகவின் அரை நூற்றாண்டு தலைவரான கலைஞர் மு.கருணாநிதி.
