பசும்பொன் கிராமத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளன்று, சசிகலா பங்கேற்க உள்ளதாக கூறப்படும் பொதுக்கூட்டம் கவனம் பெற்றுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியையும், திவாகரன், அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியையும் தொடங்கினர். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர்,அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதேநேரம், கடந்த 2022ஆம் ஆண்டு திவாகரன் தனது கட்சியை சசிகலா தலைமையின்கீழ் கொண்டுவந்தார். இந்த நிலையில்தான், 2026 தேர்தலில் சசிகலா தனிக்கட்சி தொடங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

sasikala
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி சசிகலாவின் ஆதரவாளர்கள் நிகழ்வு ஒன்றை நடத்துகின்றனர். நிகழ்வுக்கான பந்தல் அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா காலை நடைபெற்றது. அண்மையில் வி.கே.சசிகலாவை சந்தித்துப் பேசிய ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரை முகூர்த்தக்கால் நடும் விழாவில் பங்கேற்றார். அவருடன் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சசிகலா ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். இந்தநிகழ்வில் சசிகலா பங்கேற்க வாய்ப்பிருப்பதாகவும், அப்போது அவர் தனிக்கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் இந்தப் பொதுக்கூட்டம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
