இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்போட்டியை காண இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் வர உள்ளனர்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை லீக் போட்டி, மழை மற்றும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும் நடைபெறுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டி, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால், தற்போது அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், மழையின் அச்சுறுத்தலுக்கு இடையிலும் இந்தப் போட்டி நடக்கவிருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான்
புள்ளிவிவரங்களின்படி, டி20 போட்டிகளில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. இதுவரை மோதிய 16 போட்டிகளில் இந்தியா 13 முறையும், பாகிஸ்தான் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, டி20 உலகக்கோப்பையில் இந்தியா 7 முறை வென்றுள்ளது, பாகிஸ்தான் ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது. பிரேமதாசா மைதானத்தில் 2023ஆம் ஆண்டு முதல் ஸ்பின்னர்களின் ரன் ரேட் 6.77 மட்டுமே என்பதால், பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மது, முஹமது நவாஸ் உள்ளிட்ட 4 பலமான ஸ்பின்னர்களைச் சமாளிப்பது இந்தியாவுக்கு சவாலே.
அதே நேரம், அபிஷேக் சர்மா மீண்டும் இணைவதாலும், இந்தியா அணி 8 பேட்ஸ்மேன்களுடன் களம் காண்பதாலும், போட்டி இந்தியாவிற்கு சாதகம் என்றே கருதப்படுகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியை காண இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
