டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10ஆவது சீசன், கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடி வரும் நிலையில், இன்று இந்திய அணி தனது 2ஆவது போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இன்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு குளிர்பான விற்பனை மையத்திற்கு அருகே, அங்கிருந்த ஊழியர்கள் வெள்ளை நிற கப்களில் இருக்கும் திரவத்தை மீண்டும் பெரிய பாட்டில்களில் ஊற்றுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அதாவது, பயன்படுத்தப்பட்ட அல்லது எஞ்சிய குளிர்பானங்களை இவ்வாறு செய்வதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அவர்கள், பயன்படுத்தப்பட்ட குளிர்பானங்களை இவ்வாறு மீண்டும் பாட்டில்களில் சேகரிப்பது பெரும் சுகாதார சீர்கேடு என்றும், இது ஒரு மிகப்பெரிய மோசடி என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இருப்பினும், இது வீணாவதைத் தவிர்க்க ‘டிஸ்பென்சர்’ இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட புதிய குளிர்பானங்களை மாற்றும் நடவடிக்கை என மற்றொரு தரப்பினர் வாதிட்டு வருகின்றனர். உணவுப் பாதுகாப்பு விதிகளின்படி, ஒருமுறை பரிமாறப்பட்ட பானங்களை மீண்டும் சேகரிப்பதோ அல்லது மற்றவர்களுக்கோ வழங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது. இது பாக்டீரியா தொற்று மற்றும் அசுத்தமான பொருட்கள் கலக்க வழிவகுக்கும் என்பதால் மிக ஆபத்தானது என பலரும் வீடியோவை பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
