மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால், இணையச் சேவையை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல், தங்குல் சமூகத்தைச் சேர்ந்த நபரை தாக்கியது. மேலும் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதனால், இணையச் சேவையை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க… அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

manipur violenceANI
பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பமால் இருந்துவந்தது. இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்த பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் பதவி விலகியதைத் தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த 4ஆம் தேதி கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பாஜக அரசு பதவியேற்றது. இந்த நிலையில், மணிப்பூரில் இன்று மீண்டும் வன்முறை வெடித்தது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் தங்குல் சமூகத்தைச் சேர்ந்த நபரை தாக்கியது. மேலும் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது.

manipur violenePTI
இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. ஆயுதம் ஏந்திய நபர்கள் அப்பகுதியில் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக, உக்ருல் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இணையச் சேவைகளை மாநில அரசு நிறுத்திவைத்துள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த லிட்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
