
இந்தியாவில் நீண்ட காலமாகவே அதிக அளவில் மாசு ஏற்படுத்தி வரக்கூடிய பழைய வாகனங்களின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் அடிப்படையில் மத்திய சாலை மேம்பாட்டு துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆட்டோ மொபைல் துறையில் இந்தியா வளர்ச்சி பெறுவதற்கு ஒரு ஐடியா இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்திய வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தியாவில் தற்போது சாலையில் ஓட தகுதியற்ற 97 லட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த 97 லட்சம் பயன்பாட்டில் இருந்து நீக்கி விட்டால் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை பெரிய அளவில் வளர்ச்சி காணும் என கூறுகிறார் .

இது அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வருமானத்தை ஏற்படுத்தி தரும் என்றும் 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் உலகின் நம்பர் ஒன் ஆட்டோ மொபைல் துறையாக இந்தியா உருவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். 2025 ஆகஸ்ட் மாத நிலவரப்படி இந்தியாவில் சாலையில் ஓட தகுதியற்ற 3 லட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றன . இதில் 1.4 லட்சம் வாகனங்கள் அரசுக்கு சொந்தமானவை.
சராசரியாக மாதம் தோறும் 16, 830 வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. இதற்காக தனியார் துறையினர் 2700 கோடி முதலீடு செய்து இருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாசு உலக அளவில் பெரும் பிரச்சனையாக இருந்து வரக்கூடிய சூழலில் தான் மத்திய அரசு Voluntary Vehicle Fleet Modernization Program என்ற திட்டத்தின் மூலம் Vehicle Scrapping Policy என்ற ஒரு புதிய கொள்கையை கொண்டு வந்தது.
இந்த கொள்கையின் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய பழைய பாதுகாப்பற்ற மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக பயன்பாட்டில் இருந்து நீக்கி வருகின்றனர். இந்த சூழலில் புதிதாக வாகனம் வாங்க வரக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்களுடைய பழைய வாகனங்களை பயன்பாட்டிலிருந்து நீக்கியதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கும் போது வாகன விற்பனை நிறுவனங்கள் அவர்களுக்கு 5 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை முன் வைத்திருக்கிறார்.
பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட வாகனங்களில் இருந்து பெறப்படும் அலுமினியம் மற்றும் பிற பொருட்களை கொண்டு புதிதாக வாகன உதிரி பாகங்களை தயாரிப்பதன் மூலம் வாகன தயாரிப்புக்கான செலவு குறைகிறது என தெரிவிக்கும் அவர் இந்தியாவில் தற்போது 97 லட்சம் வாகனங்கள் சாலையில் ஓட்ட தகுதியற்றவையாக இருக்கின்றன இவற்றை நாம் முழுமையாக பயன்பாட்டில் இருந்து நீக்கினால் காற்று மாசு அடைவது, அதிக அளவில் எரிபொருட்கள் நுகர்வு ஆகியவை குறையும் என கூறுகிறார். சாலை பாதுகாப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.