18 ஆண்டுகளில் முதல்முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான சர்வதேச தரநிலையில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்திருக்கிறார், ரோகித் சர்மா.
Summary
18 ஆண்டுகளுக்குப் பிறகு, ரோகித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 202 ரன்கள் குவித்து, சுப்மன் கில்லின் குறைந்த ரன்கள் காரணமாக முன்னேறினார். 38 வயதில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த மிக வயதான பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
2007-ஆம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் ஷர்மாவின் சர்வதேச பயணம் தொடங்கியது. ரன் குவிப்பில் மேடு பள்ளங்களை கடந்து ஒருகட்டத்தில் ஹிட்மேனாக உருவெடுத்தார் ரோகித் ஷர்மா.
18 ஆண்டுகளில் முதல்முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான சர்வதேச தரநிலையில் முதன்முறையாக முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவர். 7 மாதகால இடைவெளிக்கு பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கினார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 202 ரன்கள் குவித்து தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரரானார்.

rohit sharma
இத்தகைய ரன்குவிப்பு தரவரிசைப் புள்ளிகளை அதிக அளவில் அதிகரிக்கச் செய்தது. முன்னாள் முதல்நிலை வீரரான சுப்மன் கில், அதே ஆஸ்திரேலியத் தொடரில் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐசிசி தரவரிசை விதிகளின்படி, வீரர் தொடர்ந்து விளையாடாமல் இருந்தாலோ அல்லது மோசமாகச் செயல்பட்டாலோ அவர்களின் புள்ளிகள் குறையும்.
சுப்மன் கில்லின் இந்தச் சரிவு, ரோகித் ஷர்மாவுக்கு முதலிடம் செல்வதற்கான வாய்ப்பை வழங்கியது. ஐசிசி தரவரிசை என்பது மூன்று ஆண்டுகள் வரையிலான வீரர்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ரோகித் ஷர்மா இடைவெளி எடுத்திருந்தாலும், அவருக்கு முன்னர் இருந்த அதிக புள்ளிகள் வீணாகவில்லை. மாறாக, அவர் பெற்ற புதிய அதிக புள்ளிகள், வீழ்ச்சியடைந்த போட்டியாளர்களை உடனடியாக முந்திச் செல்ல உதவியது.

gill, rohit sharma
தன் மீதான ஓய்வுக் கேள்விகளுக்கு மட்டையின் மூலம் பதில் தெரிவித்த ரோகித் ஷர்மா, 38 ஆவது வயதில் முதலிடத்தைப் பிடித்து சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். 38 ஆண்டுகள் மற்றும் 182 நாட்களில், இந்தச் சாதனையை அவர் எட்டியிருப்பதன் மூலம், ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த மிகவும் வயதான பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டில் 38 ஆண்டுகள் மற்றும் 73 நாட்களில் முதலிடத்தில் இருந்த சச்சினின் சாதனையை ரோகித் முறியடித்துள்ளார்
