ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பாஜக அமைச்சர் ஒருவர் இந்த சம்பவம் வீராங்கனைகளுக்கு ஒரு பாடாமாக அமையும் எனப் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
Summary
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல், அவர்களை குறைகூறியிருக்கிறார் என்று கண்டனங்கள் எழுந்துள்ளன.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில், கடந்த 25 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற போட்டி ஒன்றிற்காக ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியினர் இந்தூரில் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இரண்டு பேர் அருகில் உள்ள உணவகத்திற்கு செல்வதற்காக வெளியே நடந்து சென்றபோது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலியா வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் கைது
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு அதிகாரிகளின் மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக அகீல் கான் என்பவரை மத்திய பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் மோகம் இருக்கிறது. வீராங்கனைகள் வெளியில் செல்லும் போது பாதுகாவலர்கள் அல்லது நிர்வாகத்திடம் சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பயிற்சியாளர்களிடம் கூட சொல்லாமல் சென்றிருக்கிறார்கள். அவர்கள் பக்கமும் தவறு இருக்கிறது. இதனை வீராங்கனைகள் எதிர்காலத்தில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். வீராங்கனைகளுக்கு நடந்த இந்த சம்பவம் நமக்கு மட்டுமின்றி வீராங்கனைகளுக்கும் ஒரு பாடம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களை குறைகூறி வருகிறார் என பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
