 
        அரசியல் கட்சித் தலைவர்களின் ரோட் ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
கரூரில் நடந்த விபத்துக்குப் பிறகு, அரசியல் கட்சிகளின் ரோட் ஷோக்களுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 நாட்களில் விதிமுறைகளை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு நேர்முக உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படுவதால், பிரச்சாரத்துக்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என த.வெ.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே, இந்த வழக்கில் பொது சொத்துக்கள் சேதத்துக்கு இழப்பீடு வசூலிப்பது குறித்து விதிகள் வகுக்க தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

கரூர் தவெக பரப்புரை
இந்த சூழலில், செப்டம்பர் 27 ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியாகினர். இதையடுத்து, அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு வழிகாட்டி விதிமுறைக்ளை வகுக்க கோரி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த அனைத்து வழக்குகளும், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வழிகாட்டு விதிகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. விதிகள் வகுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்தாலோசனை செய்து வருவதாக விளக்கமளித்தார்.
விதிகளை வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என அரசு கூறுவது அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பது ஆகாதா? எந்த அடிப்படையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது ? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில் இருந்து தடுக்கப்படுவதில்லை என கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
தொடர்ந்து, த.வெ.க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தங்களையும் இணைக்க அனுமதிக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கோரிக்கை விடுத்தார்.

கரூர் கூட்ட நெரிசல்
த.வெ.க. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, பிரச்சாரத்துக்கு ஒரு நாள் முன் அனுமதி வழங்கப்பட்டது. முன் கூட்டியே அனுமதியளித்திருந்தால் இந்த அசம்பாவித சம்பவம் நடந்திருக்காது எனத் தெரிவித்தார். மேலும், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தையும் அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், எல்லா கட்சிகளுக்கும் முன் கூட்டியே அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, வழிகாட்டு விதிமுறைகள் வகுக்காவிட்டால் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்தார். காவல்துறை, மாநகராட்சி, தீயணைப்பு துறை, மருத்துவ துறை உள்ளிட்டோர்களிடம் ஆலோசித்து தான் விதிமுறைகள் வகுக்க வேண்டும்.. உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா
இதை ஏற்று, 10 நாட்களில் வழிகாட்டு விதிமுறைகளை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அதேசமயம், நெடுஞ்சாலைகள் தவிர பிற அனுமதிக்கப்பட்ட இடங்களில் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதியளிக்க கோரிய விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதிகள், கூட்டங்களுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது குறித்த காலத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

 
                         
         
         
         
         
        