 
        2025 மகளிர் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னதாக இந்திய அணியின் நம்பிக்கை வீராங்கனை பிரதிகா ராவல் விலகியிருப்பது இந்தியாவிற்கு பேரிடியாக விழுந்துள்ளது..
Summary
பிரதிகா ராவலின் காயம் 2023-ல் ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயத்தை நினைவுபடுத்துகிறது. இதனால், இந்திய மகளிர் அணி 2025 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வெல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது. மூத்த வீரர்கள் மந்தனா, ஹர்மன்ப்ரீத் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமாகும்.
1978 முதல் உலகக்கோப்பையில் பங்கேற்றுவரும் இந்திய மகளிர் அணி, இதுவரை 10 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளது. அதில் 2005 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் மிதாலி ராஜ் தலைமையில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தது. அதைத்தவிர்த்து 1997 மற்றும் 2000 ஆண்டுகளில் அரையிறுதியில் தோற்ற இந்திய அணி, இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாமல் இருந்துவருகிறது.

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி
இந்தசூழலில் சொந்த மண்ணில் நடக்கும் 2025 மகளிர் உலகக்கோப்பையில் வலுவான பேட்டிங் மற்றும் நல்ல பவுலிங் அட்டாக் உடன் களமிறங்கியிருக்கும் இந்திய மகளிர் அணி முதல் உலகக்கோப்பையை வென்றுவிடும் நம்பிக்கையில் இருந்துவருகிறது..

இந்திய மகளிர் அணி
ஆனால், தற்போது அந்த நம்பிக்கையில் மிகப்பெரிய கல்லை எறியும் விதமாக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய தொடக்க வீரர் பிரதிகா ராவல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.. இது நம்பிக்கையுடன் இருந்த இந்திய அணிக்கு பேரிடியாக விழுந்துள்ளது..
இந்தியாவை துரத்தும் காயம்..
2025 மகளிர் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி, பலம்வாய்ந்த ஆஸ்திரேலியாவை வரும் அக்டோபர் 30-ம் தேதி நவி மும்பை மைதானத்தில் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது..
முக்கியமான போட்டிக்கு முன்னதாக கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா விளையாடிய போது, இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பிரதிகா ராவலுக்கு ஃபீல்டிங் செய்யும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இக்காயம் அவரை உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது..
இந்த சம்பவம் கடந்த 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட கணுக்கால் காயத்தை நினைவுப்படுத்துகிறது. மேட்ச் வின்னிங் வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா இல்லாதது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்தியாவை தோல்விக்கு அழைத்துச்சென்றது.. தற்போது அதேபோலான ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ள நிலையில், அது இந்திய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது..
இதுமட்டுமில்லாமல் 2019 உலகக்கோப்பையின்போது கூட லீக் போட்டியில் சதம் விளாசிய தொடக்கவீரர் ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயம், அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவை தோல்விக்கு அழைத்துச்சென்றது.
தற்போது மகளிர் அணிக்கும் அத்தகைய சூழல் ஏற்படுமா? இல்லை மூத்தவீரர்கள் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் உடன் சேர்ந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீப்தி சர்மா, ரிச்சா கோஸ் போன்ற வீரர்கள் இந்தியாவிற்கு கோப்பையை தேடித்தருவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..

 
                         
         
         
         
        