2026 சட்டசபை தேர்தலில் தற்போதைய ஆட்சியை அகற்றிவிட்டு ஜெயலலிதாவின் ஆட்சிதான் அமையும். அதை நான் கொண்டு வருவேன் என வி.கே சசிகலா தெரிவித்துள்ளார்.
Summary
சசிகலா தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்து, 2026 தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என உறுதியளித்தார். தி.மு.க. அரசின் செயல்பாடுகள் குறித்தும், நெல் கொள்முதல் முறையில் ஏற்பட்ட குளறுபடிகள் பற்றியும் அவர் கடுமையாக விமர்சித்தார். தி.மு.க. அரசு விளம்பரத்தையே நம்பி செயல்படுகிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “ தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் நெல் கொள்முதல் முறையாக நடைபெறவில்லை. தமிழகத்தில் லாரி ஒப்பந்தம் கொடுத்ததில் மிகப்பெரிய தவறு நிகழ்ந்துள்ளது. ஒரே ஒரு நிறுவனத்திற்கு மட்டும் ஒப்பந்தம் கொடுத்துள்ளதால் இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் காரணம். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அந்தந்த மாவட்ட அளவில் ஒப்பந்தம் கொடுத்து கொள்முதல் சிறப்பாக நடைபெற்றது. அதுபோல் கொடுத்து இருக்க வேண்டும். அவ்வாறு கொடுத்திருந்தால் இந்த பிரச்சினை இப்போது ஏற்பட்டு இருக்காது.

sasikala
தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்திற்கு மேலாண் இயக்குனர்கள் 5 பேரை ஒரு ஆண்டிற்குள் மாற்றி உள்ளனர். இதனால் அவர்களால் எந்த பணியும் செய்ய முடியவில்லை. அதிகாரிகளை குறை சொல்ல முடியாது. ஆனால் நிர்வாகத்தை வழிநடத்த இந்த அரசால் முடியவில்லை. நெல் கொள்முதலில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் நெல் கொள்முதலை முறையாக செய்ய முடியாமல் இந்த அரசு திக்குமுக்காடி வருகிறது
தி.மு.க. அரசு செயல்படாத அரசு என திமுக பதவியேற்ற 3-வது மாதத்தில் இருந்து சொல்லி வருகிறேன் அது இப்போது உண்மை என நிரூபணமாகி உள்ளது. இந்த அரசு வெறும் விளம்பரத்தை மட்டுமே நம்பி செயல்பட்டு வருகிறது. அதிகாரிகளை அடிக்கடி மாற்றுவதால் தான் சாக்கு தட்டுப்பாடு, சணல் தட்டுப்பாடு போன்றவை ஏற்படுகிறது. திமுக அரசு அரசியல் மட்டுமே செய்கிறது. மக்கள் நலனில் அவர்களுக்கு அக்கறை இல்லை.
தற்போது மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களை உரிய இடத்திற்கு அழைத்துச்சென்று காண்பித்தார்களா என தெரியவில்லை. தமிழகத்தில் 625 அரிசி அரவை ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளுக்கு உரிய முறையில் நெல் மூட்டைகளை அனுப்பி இருந்தால் கூட அரவை செய்து 11 லட்சம் டன் சேமித்து வைத்திருக்கலாம். அதையும் முறையாக செய்யவில்லை. தாங்கள் செய்த தவறை மறைத்து தி.மு.க. அரசு அடுத்தவர் மீது பழி போடுவதிலேயே குறியாக உள்ளது.

நெல் மூட்டைகள்
எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதிகாரிகளை மட்டுமே வைத்து பேசுகிறார்கள். திமுக ஆட்சியில் எந்த மாவட்டத்திலும் மக்கள் நிம்மதியாக இல்லை. தி.மு.க. அரசு தங்களை திருத்திக்கொள்ளும் என நான் எதிர்பார்த்தேன். அவர்கள் திருந்தவில்லை. மக்கள் உங்களை திருப்பி அனுப்புவார்கள். இது 2026 தேர்தலில் நிச்சயம் நடக்கும். 2026 சட்டசபை தேர்தலில் இந்த ஆட்சியை அகற்றிவிட்டு ஜெயலலிதாவின் ஆட்சிதான் அமையும் அதை நான் கொண்டு வருவேன். 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.
