
உத்தரகாண்ட் மாநிலத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Summary
உத்தரகாண்ட் மாநிலத்தில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால், கடந்த இரண்டு வார காலத்தில் மட்டும் அல்மோரா பகுதியில் 7 நபர்களும், ரூர்க்கி பகுதியில் 3 நபர்களும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் விவரிக்க முடியாத காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது உள்ளூர் மக்களிடையே கவலையைத் தூண்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்ததாகவும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற வைரஸ் தொற்றுகள் இருந்ததாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், ஆய்வக முடிவுகள் இன்னும் நிலுவையில் இருப்பதால், உறுதியான காரணம் தெரியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் விரிவான பகுப்பாய்விற்காக அல்மோரா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும், அறிக்கைகள் கிடைத்தவுடன் தொற்றுக்கான சரியான காரணம் அறியப்படுமெனவும் என்று தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நவீன் சந்திரா திவாரி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், “ஏழு இறப்புகளில், மூன்று இறப்புகள் வைரஸ் தொற்றுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது. மீதமுள்ளவை வயது தொடர்பான உடல்நலக் கோளாறுகள் காரணமாக இருக்கலாம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மாநில சுகாதார அதிகாரிகள் இது மர்ம காய்ச்சல் என்பதை மறுத்துள்ளனர். வானிலை மாறி வருவதால், இது பருவகால வைரஸாக இருக்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எனினும், காய்ச்சல் பரவலை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க உத்தரகாண்ட் அரசு மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக உத்தரகாண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தேங்கிய மழைநீர் விஷக்காய்ச்சல் பரவ காரணமாக இருக்கலாம் என நீர்நிலைகளில் கொசு பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.