
அனைத்து சுகாதார நிறுவனங்களும் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேஷ் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகள் இறந்து போன சம்பவங்களை அடுத்து கர்நாடகா சுகாதாரத் துறையானது கடந்த திங்கட்கிழமை அன்று 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரை செய்யவோ அல்லது வழங்கவோ கூடாது என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், ரீடைலர்கள் போன்ற அனைவரும் குறிப்பிட்ட இந்த இருமல் மருந்து வாங்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்று கர்நாடக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டை அடிப்படையாகக் கொண்ட மருந்து தயாரிக்கும் நிறுவனம் உற்பத்தி செய்த Coldrif syrup (Batch No. SR-13) சாப்பிட்ட குழந்தைகள் இறந்து போன சம்பவங்கள் மத்திய பிரதேஷ் மாநிலத்தில் தொடர்ச்சியாக நடந்ததை அடுத்து அக்டோபர் 5ம் தேதி அன்று உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் குறிப்பிட்ட இந்த இருமல் மருந்து வாங்குவது, விற்பனை செய்வது மற்றும் சாப்பிடுவதற்கு தடை விதித்துள்ளது.

மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள Kaysons Pharma நிறுவனம் தயாரித்த Dextromethorphan Hydrobromide Syrup IP மருந்தை சாப்பிட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளும் இறந்து போன சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா திங்கட்கிழமை அன்று சுகாதாரத் துறையினை இந்த விஷயம் குறித்து தீவிரமாக கவனிக்குமாறு கட்டளையிட்டார். மேலும் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எந்த விதமான சிரப் வகைகளை பெற்றோர்கள் கொடுக்கக் கூடாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டூ ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அனைத்து இருமல் மருந்து பிராண்டுகளின் சாம்பில்கள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமான எந்த ஒரு அசம்பாவிதமும் மேலும் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பொறுத்த வரை முழுமையான மருத்துவ ஆலோசனை இல்லாமல் குறைவான அளவில் கூட இந்த இருமல் மருந்துகளை பெற்றோர்கள் கொடுக்கக் கூடாது.

அனைத்து சுகாதார நிறுவனங்களும் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து மட்டுமே மருந்துகளை வாங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருந்துகளை தயாரிப்பதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகளை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை அவ்வப்போது சோதனைகளில் ஈடுபடும் என்பதையும் தெரிவித்துள்ளது.

ஒருவேளை இந்த வழிமுறைகளை பின்பற்ற வரும் பட்சத்தில் கர்நாடக தனியார் மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2007 மற்றும் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945 இன் கீழ் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கர்நாடகா அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.