அமெரிக்கா நடத்திய தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்க இடையே 6 மாதத்துக்கும் அதிகமாக தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், ஈரானின் குசிஸ்தான், சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான், ஹோர்மொஸ்கான் மற்றும் கெர்மான் ஆகிய மாகாணங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், சேவை மையங்கள் மற்றும் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

Reuters
மேலும், ஈரானின் ஹோர்மொஸ்கான் மாகாணத்தின் சிரிக்கு மாவட்டத்தில் உள்ள கூஹெஸ்டாக் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது அமெரிக்கா நடத்தியுள்ள இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலாக அமெரிக்கத் தளங்கள் மீது தற்காப்புத் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Reuters
மேலும், அமெரிக்கப் படைகள் தனது நிலப்பரப்பைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்க வேண்டும் என்றும், போரை விரிவாக்க முயலும் அமெரிக்க-இஸ்ரேலியச் சதியை முறியடிக்க வேண்டும் என்றும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல சர்வதேச மனிதநேயச் சட்டங்களை மீறிய அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்புச் சபையை வலியுறுத்தியுள்ள ஈரான், அமைதி காக்கும் தனது கடமையிலிருந்து ஐ.நா. தவறினால் அது தனது நம்பகத்தன்மையை இழக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
