இந்திய நகரங்கள் போட்டிபோட்டு வளர்ச்சி கண்டுவரும் நிலையில் அதில் சென்னையின் இடம் என்ன என்ற கேள்வியும் இருக்கிறது. அது குறித்த ஓர் அலசல்.
1800களில் பிரிட்டிஷார் காலத்தில் இந்தியாவின் 3ஆவது பெரிய நகரமாக திகழ்ந்தது சென்னை. இரு நூற்றாண்டுகளுக்கு பின்னும் பல்வேறு காரணிகள் அடிப்படையில் 4 முதல் 6 இடங்களுக்குள் சென்னை இருந்துவருகிறது. ஆனால் தற்போது நாட்டின் பிற நகரங்களின் வளர்ச்சி வேகத்தை பார்க்கும்போது அவற்றுக்கு ஈடுகொடுத்து எதிர்காலத்திலும் தன் இடத்தை சென்னை தக்கவைத்துக்கொள்ளுமா… அதற்கான நகர்வுகள் இருக்கிறதா என்ற கேள்விகள் எழத்தான் செய்கின்றன. பல்வேறு புள்ளிவிவரங்களும் ஆய்வுத்தகவல்களும்தான் இந்த கேள்வி எழக்காரணம்.

நம்ம சென்னை
மாநகராட்சிகளின் வருடாந்திர பட்ஜெட் மதிப்பில் சென்னை 8ஆவது இடத்தில்தான் உள்ளது. புனே, சூரத், அகமதாபாத் போன்ற நகரங்கள் கூட சென்னைக்கு முன்னால் உள்ளன. 2035இல் உலகின் மிக வேகமாக வளரும் நகரமாக பெங்களூரு இருக்கும் என்கிறது சாவில்ஸ் (SAVILLS) என்ற ரியல் எஸ்டேட் நிறுவன ஆய்வு. குவாண்டம் போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான நிறுவனங்களை ஈர்ப்பதில் பெங்களூருவும் ஹைதராபாத்தும் அமராவதியும் போட்டிபோடும் வேகம் பிரமிக்கவைக்கிறது. GCC எனப்படும் அயலக பணித் தொழிலில் பெங்களூரு, ஹைதராபாத், புனே, டெல்லி தலைநகர பிராந்தியத்திற்கு அடுத்துதான் சென்னை உள்ளது.

புத்தாக்க தொழில்களை கவர்ந்திழுப்பதில் பெங்களூருவும் குருகிராமும் ஓடும் வேகத்திற்கு சென்னை இணையாக இல்லை. பல பன்னாட்டு நிறுவனங்கள் பெங்களூருவிலும் ஹைதராபாத்திலும் அலுவலகம் அமைப்பதற்கே முன்னுரிமை தருகின்றன. குறிப்பாக ஏஐ மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு பெங்களூருவே பெரும்பாலான நிறுவனங்களின் முதல் தேர்வாக உள்ளது. ஸ்விகி, பிளிப்கார்ட், சொமாட்டோ போன்ற யூனிகார்ன் நிறுவனங்கள் சென்னையில் குறைவாகவே உருவாகியுள்ளன. உத்தர பிரதேசம் கூட அதிவேக எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை பெருக்கிவருகிறது. மிகச்சிறந்த கட்டமைப்பு வசதிகளே ஒரு நல்ல பெரு நகரத்தின் அடிப்படை.

பெங்களூரு
பெங்களூருவும் ஹைதராபாத்தும் வெளிவட்டச்சாலைகள், 2ஆவது விமான நிலையம் என இவை அடுத்தடுத்து முன்னேறி வருகின்றன. ஆனால் சென்னையில் நகரத்திற்குள் போதிய வசதிகள் இல்லாத விமான நிலையம் மட்டுமே உள்ளது. சென்னையை பின்னோக்கி இழுப்பதில் முன்னணியில் உள்ள அம்சம் இதுவே.
வானுயர் கட்டடங்களை கட்டுவதில் உள்ள விதிமுறை சிக்கல்களும் வேகமான வளர்ச்சிக்கு தடைக்கல். சென்னைக்கு 55 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திராவில் உள்ள ஸ்ரீசிட்டி குறைந்த விலையில் நிலம், வரிச்சலுகைகள், விரைவான அனுமதி என தூண்டில் போட்டு சென்னை பகுதியில் வரவேண்டிய பல நிறுவனங்களை தன் பக்கம் தடம் மாற்றி வருகிறது. இப்படி பல முனைகளிலும் போட்டி அதிகரித்துவரும் நிலையில் சென்னையின் வளர்ச்சிக்கு அரசு தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட்டில் அரசு அறிவிக்கப்போகும் நடவடிக்கைகள் என்ற என்ற கேள்வி எழுந்துள்ளது
